'நாட்டை பிளவுபடுத்த ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு': கவர்னர் ரவி
'நாட்டை பிளவுபடுத்த ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு': கவர்னர் ரவி
'நாட்டை பிளவுபடுத்த ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு': கவர்னர் ரவி
ADDED : ஜூன் 18, 2024 05:59 AM

சென்னை : ''நாட்டை பிளவுபடுத்த உருவாக்கப்பட்டதே திராவிட கோட்பாடு,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
தென்மாநில கல்வி மையம் சார்பில், வழக்கறிஞர் ஜெகந்நாத் எழுதிய 'சென்னை மாகாணத்திற்கான முதல் உரிமைக்குரல் எழுப்பிய கஜுலு லட்சுமிநரசு செட்டி' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், தமிழக கவர்னர் ரவி நுாலை வெளியிட, மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
பிரிட்டிஷ் கவர்னர் ஆஷ்சின் அடக்குமுறைக்கு அடிபணியாமல், தமிழக வீரர் வாஞ்சிநாதன், அவரை தன் 25வது வயதில் சுட்டுக் கொன்றார். அவரின் நினைவு தினத்தில், தமிழக சகோதர - சகோதரிகளுக்கு என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
பிரிட்டிஷார் நம் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்தபோது, நாம் பல சமஸ்தானங்களாகவும், பல மொழி பேசுவோராகவும் பிரிந்திருந்தோம். ஆனால், அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் இருந்தோம். அவர்கள், வியாபாரத்தை பெருக்க, வட மாநிலங்களில் ஹிந்து - முஸ்லிம் எனவும், தென் மாநிலங்களில் திராவிடர், திராவிட மொழி என்ற புதிய கோட்பாட்டையும் உருவாக்கி நாட்டை பிளவுபடுத்தினர்.
அவர்கள் வந்தபோது, நாட்டில் அனைவரும் பாகுபாடு இல்லாமல், அவரவர் கிராமத்தில் அவரவர் மொழியில் படித்தனர். உயர் கல்வியில் தாய்மொழியும், சமஸ்கிருதமும் இருந்தன. பள்ளிகளுக்கான நிலங்களை சமூகத்தினரே அளித்தனர். ஆசிரியர்களாக இருந்த பிராமணர்கள், கல்விக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. அவர்களுக்கு தேவையானதை சமூகத்தினர் செய்தனர்.
கல்வி தானம் அளித்த பிராமணர்களை ஒழித்து, மூட நம்பிக்கையை வளர்த்து, கல்வியை வியாபாரமாக்க திட்டமிட்ட அவர்கள், பிராமண துவேஷம், சமஸ்கிருத துவேஷம் செய்தனர். இதை இங்கிருந்தோர் நம்பினர்.
இந்தியர்களை, 18ம் நுாற்றாண்டில், மற்ற நாடுகளில் அடிமைகளாக விற்கும் பழக்கம் இருந்ததை எதிர்த்து, நாடு முழுதும் கிளர்ச்சி நடந்தது. வங்காளம் பிரிக்கப்பட்ட போது, இங்கு புரட்சி வெடித்தது. இப்படி, நம் நாட்டையும், பாரம்பரியத்தையும் காப்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடந்தது.
ஆனால், இந்த போராட்டங்களை இருட்டடிப்பு செய்துவிட்டு, பிராமணரல்லாதோர் இயக்கம், திராவிட இயக்கத்தால், மாநிலம் வளர்ந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆவண காப்பகங்களில் உள்ள சான்றுகள் வேறு மாதிரியாக உள்ளன.
இப்படி மறைக்கப்பட்ட வரலாற்றில் ஒன்று தான், சென்னை மாகாணத்துக்கான மாநில மொழி கல்வி உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடிய கஜுலு லட்சுமிநரசு செட்டியின் வரலாறு. இந்த நுால் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இது போன்ற உண்மைகளை எழுத ஆய்வாளர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.