மோடி பெயரை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிப்பு
மோடி பெயரை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிப்பு
மோடி பெயரை பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : ஜூன் 08, 2024 01:32 AM
சென்னை:பிரதமர் திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக கூறி, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்து தப்பிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவேற்காடு, டி.டி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் சாந்தா, 75. இவரது கணவர் சின்ராஜ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருந்து வாங்க, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மூதாட்டி வந்துள்ளார்.
அவரிடம், 35 வயதுடைய மர்ம நபர் பேச்சு கொடுத்துள்ளார். மூதாட்டியின் கணவரின் உடல் நலன் குறித்து விசாரித்தவர், வயதான தம்பதியருக்கு பிரதமர் மோடி, 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாக கூறி, அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்த தொகையை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.
அதை நம்பிய மூதாட்டியை, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என, தனியாக அழைத்துச் சென்று, காகிதம் ஒன்றில், பெயர், கணவர் பெயர், வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்டு எழுதி உள்ளார்.
பின், 'கடன் தொகை, 10 லட்சம் ரூபாய் என்பதால், உங்களிடம் இருக்கும் சொத்து விபரங்களை எழுத வேண்டும்' என்று, கூறியிருக்கிறார்.
அதற்கு மூதாட்டி தனக்கு எதுவும் தெரியாது என்றதும், 'அப்படியானால், நீங்கள் அணிந்து இருக்கும் நகையை கொடுங்கள்; அதிலுள்ள முத்திரை மற்றும் எண்களை குறித்து விட்டு தருகிறேன்' என, கேட்டுள்ளார்.
மூதாட்டியும், 5 சவரன் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். செயினை பார்த்து விண்ணப்பத்தில் எண்களை குறிப்பது போல நடித்து விட்டு, மீண்டும் மூதாட்டியிடமே கொடுத்து விட்டார்.
பின், அந்த மூதாட்டிக்கு தண்ணீர் தருவது போல மயக்க மருந்து கொடுத்து, 5 சவரன் சங்கிலியை பறித்து தப்பி விட்டார். சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.