ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு
ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு
ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவிக்கு தொடர்பு
ADDED : ஜூலை 13, 2024 04:42 AM

மதுரை: மதுரை, எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவரது, 14 வயது மகன் நேற்று முன்தினம் காலை ஆட்டோவில் பள்ளிக்கு சென்றபோது, ஆம்னி வேனில் வந்த சிலர் வழிமறித்தனர்.
ஆட்டோவை அங்கேயே நிறுத்த செய்து, மாணவனையும், ஆட்டோ டிரைவர் பால்பாண்டியையும் ஆம்னி வேனில் கடத்தினர். அவர்களில் ஒருவர் மைதிலிக்கு போன் செய்து, 'உன் மகன் உயிரோடு வேண்டுமானால், 2 கோடி ரூபாய் தர வேண்டும்' என, மிரட்டல் விடுத்தார்.
துப்பாக்கியால் மிரட்டல்
இதுகுறித்து, மைதிலி போலீசில் புகார் செய்தார். போலீசார் நெருங்குவதை அறிந்து மாணவனையும், பால்பாண்டியையும் செக்கானுாரணி அருகே கிண்ணிமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கடத்தல்காரர்கள் தப்பினர்.
இவ்வழக்கில் மதுரையை சேர்ந்த கிேஷார், துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பெண் சூர்யா, கூலிப்படையான துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில் உட்பட ஏழு பேரை எஸ்.எஸ்.காலனி போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கடன் பிரச்னையால் மாணவர் கடத்தப்பட்டார். மைதிலிக்கு பயத்தை ஏற்படுத்த ஆட்டோ டிரைவர் பால்பாண்டியை பட்டாக்கத்தி கைப்பிடியால் தாக்கி காயம் ஏற்படுத்தி, அதை மொபைல் போனில் காண்பித்து பேரம் பேசினர்.
மாணவன் சத்தம் போடாமல் இருக்க நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். இரண்டு மணி நேரம் கழித்து கடத்தல்காரர்களுக்கு ஒரு போன் வந்துள்ளது. தொடர்ந்து, இருவரையும் வழியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கூலிப்படையினர்
இதில், விளாத்திக்குளம் சூர்யா சில ஆண்டுகளுக்கு முன் மைதிலி, அவரது கணவர் ராஜ்குமாரிடம் வட்டிக்கு, 2 கோடி ரூபாய் கடன் வாங்கினார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் திருப்பி தராமல், கடனுக்கு ஈடாக மதுரையில் உள்ள சில சொத்துகளை மைதிலிக்கு சூர்யா எழுதிக் கொடுத்துள்ளார்.
பணமும், சொத்தும் இல்லாத நிலையில், மைதிலியின் மகனை கடத்தி, 2 கோடி ரூபாய் பறிக்க சூர்யா திட்டமிட்டார். இதற்காக, துாத்துக்குடி மகாராஜா, போடி செந்தில் உள்ளிட்ட கூலிப்படையினரை அணுகினார். திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் நான்கு பேர் ஆம்னி வேனில் மாணவனையும், ஆட்டோ டிரைவரையும் கடத்தினர்.
கூட்டாளிகள் இருவர் டூ வீலரில் பின் தொடர்ந்து வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த சூர்யா, கூலிப்படையினருக்கு தகவல் தெரிவித்ததால் இருவரையும் இறக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில், சூர்யாவின் கணவர் குஜராத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உள்ளார். அவருக்கு தன் மனைவியின் நடவடிக்கைகள் குறித்து தெரியுமா என, தெரியவில்லை.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.