Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பழனிசாமியை தவிர்த்த செங்கோட்டையன்

பழனிசாமியை தவிர்த்த செங்கோட்டையன்

பழனிசாமியை தவிர்த்த செங்கோட்டையன்

பழனிசாமியை தவிர்த்த செங்கோட்டையன்

UPDATED : மார் 12, 2025 07:22 AMADDED : மார் 12, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
கோவை: தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில், கட்சியின் பொது செயலர் பழனிசாமி பங்கேற்றார். அவரை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்க, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னதாகவே வந்திருந்து, மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

அ.தி.மு.க.,வை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் விஜய் விகாஸ் -- தீக்சனா திருமண வரவேற்பு விழா, கோவை 'கொடிசியா' அரங்கில் நேற்று முன்தினம் இரவு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

குரூப் போட்டோ


அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, மணமக்களை வாழ்த்திய போது, குடும்ப உறுப்பினர்கள் தனியாகவும், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தனியாகவும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். பின், சாப்பிட்டு விட்டு, புறப்பட்டார்.

வழக்கமாக, அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் இல்லத் திருவிழாவுக்கு கட்சி தலைவர்கள் வந்தால், மணமக்களை வாழ்த்தி சிறிது நேரம் பேசுவது வழக்கம்; அதுபோன்ற உரையை பழனிசாமி தவிர்த்து விட்டார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கொடிசியா அரங்கிற்கு மதியமே வந்து விட்டார்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று பார்வையிட்ட அவர், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி வரும் நேரத்தை அறிந்ததும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பினார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருவதற்கு முன்பே, முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மணமக்களை வாழ்த்திச் சென்றார்.

கண்காணிப்பு


முன்னாள் அமைச்சர்கள் எவரும், பொது செயலர் பழனிசாமி வருகைக்காக காத்திருக்கவில்லை. தங்கமணி, செல்லுார் ராஜு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமி சென்றபின், வந்தனர்.

இதேபோல், பா.ஜ., - தே.மு.தி.க., - நாம் தமிழர் கட்சி உட்பட மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகளை வரவேற்று, அனைவருக்கும் உறவினர்களை அறிமுகப்படுத்தினார்.

உளவுத்துறை போலீசார், நிகழ்ச்சிக்கு வி.ஐ.பி.,களின் வருகையை கண்காணித்து, 'ரிப்போர்ட்' அனுப்பினர். இதற்காக, ஒவ்வொரு நுழைவாயிலிலும் உளவுத் துறையினர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

வழி நெடுக பிளக்ஸ் பேனர் தொந்தரவு செய்யாத போலீஸ்

கோவை அவிநாசி ரோட்டில் இருந்து கொடிசியா அரங்கம் வரை ரோட்டின் இருபுறமும் கட்சிக் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. அதேபோல், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரது கட்-அவுட்டுகள், வழிநெடுக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க., மாநாட்டுக்குச் செல்வதுபோல், அலங்கார விளக்குகளுடன் வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவிநாசி ரோட்டில், கோட்டை போல் முகப்பு, அரங்கு நுழைவாயிலில் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்து.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவை வந்திருந்தபோது, அவிநாசி ரோட்டில் பா.ஜ.,வினர் பிளக்ஸ் பேனர் வைத்தபோது, அவற்றை போலீசார் அகற்றினர். அதை கண்டித்து பா.ஜ.,வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தினர், மாநாடு தொடர்பாக பிளக்ஸ் பேனர் வைத்திருந்தபோது, போலீசார் கிழித்தெறிந்தனர். ஆனால், வேலுமணி இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு பிளக்ஸ் பேனர்கள் வைத்ததற்கு, போலீஸ் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us