ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம்
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம்
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்தபடி நடத்தாமல் நிறுத்தம்
ADDED : ஜூன் 03, 2024 06:00 AM
சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், அரசாணையின்படி நடத்தப்படாமல், திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு, அரசாணை விதிகளின்படி, முன்னுரிமை வழங்கப்பட்டு இடமாறுதல் வழங்கப்படும்.
கால அட்டவணை
இந்த ஆண்டு, கல்வியாண்டு துவங்கும் ஜூனிலேயே இடமாறுதல் பணிகளை முடித்தால், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் பிரச்னைகள் இன்றி தவிர்க்கலாம் என, முடிவு செய்து, அதற்கான விண்ணப்ப பதிவு பணி, மே 13ல் துவங்கப்பட்டது. மே, 20ல் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, மே 24 முதல் இடமாறுதல் கவுன்சிலிங்கை துவங்க முடிவானது.
இதற்கான கால அட்டவணை விபரம் அடங்கிய அரசாணை, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரனால், மே, 3ல் வெளியிடப்பட்டது.
இதன்படி, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 37,358 பேர்; தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், 26,075 பேர் என, 63,433 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் கல்வி ஆண்டு துவக்கத்திலேயே இடமாறுதல் பெற்று, குடும்பத்துடன் தங்கள் விருப்பமான இடங்களுக்கு இடம் பெயரலாம் என்று காத்திருக்கின்றனர்.
ஆனால், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், அரசாணையில் கூறப்பட்ட கால அட்டவணையின்படி, கவுன்சிலிங்கை நடத்த முடியவில்லை.
ஒருங்கிணைப்பு இல்லை
சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், கவுன்சிலிங் தொடர்பான விதிகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளாலும், ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு நெருக்கடிகளாலும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, பள்ளிக்கல்வித் துறை திடீரென நிறுத்தி வைத்துள்ளது.
இதனால், விதிப்படி இடமாறுதல் பெற வேண்டிய ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடு தடுமாறுவது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.