மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
UPDATED : ஆக 02, 2024 06:05 AM
ADDED : ஆக 02, 2024 05:56 AM

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.,யும், டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவத்தில், டில்லி முதல்வரின் உதவியாளர் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். கடந்த மே 13ம் தேதி கெஜ்ரிவாலை சந்திக்க சென்றபோது, அவரது பாதுகாவலர் பிபப் குமாரால், தான் தாக்கப்பட்டதாக மாலிவால் புகார் கூறினார்.
இதில் கைது செய்யப்பட்டுள்ள பிபப் குமார், ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் சூர்ய காந்த், திபாங்கர் தத்தா, உஜ்ஜல் பையான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது. பிபப் குமாரின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம் அமர்வு சரமாரி கேள்வி கேட்டது. அமர்வு கூறியுள்ளதாவது:
நாங்கள் பல ஜாமின் வழக்குகளை சந்தித்துள்ளோம். கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் ஜாமின் அளித்துள்ளோம். வழக்கின் போக்கை பொறுத்தே அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இந்த வழக்கில், ஒரு பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். முதல்வரின் வீடு என்பது தனிப்பட்ட அவருடைய பங்களா இல்லை. பொதுமக்கள் என, பலரும் வருவர். அவர்களிடம் இப்படித்தான் கடுமையாக நடந்து கொள்வதா?
ஏதோ குண்டர்கள் நுழைந்துவிட்டதுபோல், இவரைத் தாக்கியுள்ளார். தன் உடல்நிலை குறித்து அவர் கூறிய பிறகும் தாக்கியுள்ளார். இது லேசான காயம் தான் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவருக்கு யார் இந்த அதிகாரத்தை அளித்தது?
இவ்வாறு அமர்வு கூறியது.
இது பொய் வழக்கு என்றும், அரசியல் நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது என்றும் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டார். அரசியல் விவகாரத்துக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. போலீஸ் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படியே விசாரிக்கிறோம் என அமர்வு கூறியுள்ளது.