பிளஸ் 2 முடித்த பின் என்ன படிப்பது? எங்கு படிப்பது? மார்ச் 28ல் 'தினமலர்' வழிகாட்டி
பிளஸ் 2 முடித்த பின் என்ன படிப்பது? எங்கு படிப்பது? மார்ச் 28ல் 'தினமலர்' வழிகாட்டி
பிளஸ் 2 முடித்த பின் என்ன படிப்பது? எங்கு படிப்பது? மார்ச் 28ல் 'தினமலர்' வழிகாட்டி
ADDED : மார் 12, 2025 06:18 AM

சென்னை : பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்; அதை எங்குள்ள கல்வி நிறுவனத்தில் படிக்கலாம் என்பது குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்படும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி, சென்னையில் வரும், 28ம் தேதி துவங்க உள்ளது.
தற்போது தமிழகத்தில், சி.பி.எஸ்.சி., மற்றும் மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்.
அவர்கள் அடுத்து எங்கு, எந்த படிப்பை தேர்வு செய்வது என்ற குழப்பம் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் இருக்கும்.
அவர்களுக்கு, கல்வியாளர்களின் வாயிலாக ஆலோசனை வழங்கும், இந்தாண்டுக்கான 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி, வரும் 28 முதல் 30ம் தேதி வரை, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்துடன் இணைந்து, தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கும்.
கருத்தரங்குகள்
மூன்று நாட்களிலும், உயர் கல்வி நுழைவு தேர்வுகளான நீட், ஜெ.இ.இ., உள்ளிட்டவற்றில் சாதிப்பதற்கான ஆலோசனைகள், எதிர்கால வேலைவாய்ப்புகளை வழங்கும் ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., இன்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட படிப்புகள் குறித்து விளக்கப்படும்.
கலை, அறிவியல் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், சட்டம். சி.ஏ., உள்ளிட்ட தொழில்சார் படிப்புகளால் கிடைக்கும் வாய்ப்புகள், அவற்றில் சேர்வதற்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் விபரங்களை வல்லுநர்கள் தெரிவிப்பர்.
மேலும், அந்த படிப்புகளுக்கான பிரத்யேக கல்வி நிறுவனங்கள், அவற்றின் திறன்கள், புதிய கல்விப் பிரிவுகள், படித்த பின் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து, 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் விளக்க உள்ளனர்.
அரங்குகள்
தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறும்.
அவற்றுக்கு, மாணவர்கள் நேரில் சென்று, விண்ணப்பம், சேர்க்கை, கல்வி நிறுவனத்தில் உள்ள வசதிகள், கட்டண விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
யார் யார்?
இந்த நிகழ்ச்சியில், ஸ்பேஸ் சயின்ஸ் பற்றி, ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் பேச உள்ளார்.
'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்ற தலைப்பில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானி வி.டில்லிபாபு பேச உள்ளார். உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து, ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான சுதாராமன் விளக்க உள்ளார்.
வேலை வாய்ப்பு திறன்கள் பற்றி, 'ஸோகோ' நிறுவனத்தின் மனித உரிமை மேலாளர் சார்லஸ் காட்வின் ஆலோசனை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியின் பங்காளிகளாக, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் ஆகியவை செயல்படுகின்றன.
அவற்றுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, அமெட் மற்றும் வேல்ஸ் பல்கலைகளும் இணைந்து வழங்குகின்றன.