4,544 தொழிலாளர்கள் இணை நோயால் பாதிப்பு
4,544 தொழிலாளர்கள் இணை நோயால் பாதிப்பு
4,544 தொழிலாளர்கள் இணை நோயால் பாதிப்பு
ADDED : பிப் 25, 2024 02:13 AM
சென்னை:'தொழிலாளர்களை தேடி மருத்துவம்' திட்டத் தால், இதுவரை 4,544 பேர் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் துவக்கப்பட்டு, 1.35 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, 'தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம்' கடந்த மாதம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் வாயிலாக, தொழிற்சாலைகளுக்கே மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று, அங்குள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். இவற்றில், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற இணை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதன்படி, 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக, 6.3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது, 65,638 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,544 பேருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
பொதுவாக, இதயம், சிறுநீரகம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு அடித்தளமாக, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், மற்ற நோய்களை தவிர்க்க முடியும்.
எனவே, தமிழகத்தில், மக்களை தேடி மருத்துவம், தொழிலாளர் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் வாயிலாக, அவர்களின் இருப்பிடங்கள், பணியாற்றும் இடங்களில் பரிசோதனை செய்து, நோய் பாதிப்பு கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.