நல்ல கூட்டணி அமையும்: பழனிசாமி நம்பிக்கை
நல்ல கூட்டணி அமையும்: பழனிசாமி நம்பிக்கை
நல்ல கூட்டணி அமையும்: பழனிசாமி நம்பிக்கை
ADDED : பிப் 25, 2024 01:00 AM

சென்னை:''லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் நல்ல கூட்டணி அமையும். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, தமிழக மக்களுக்காக உழைப்பர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
'தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்' என்பதே, அ.தி.மு.க., தேர்தல் முழக்கம். எங்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பதவி பலமோ, இங்குள்ள தி.மு.க., அரசு போல் அதிகார பண பலமோ இல்லை.
எங்களிடம் இருப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அருளாசியும், 2.06 கோடி தொண்டர்கள களத்தில் உழைக்கப் போகின்றனர் என்ற நம்பிக்கையும் தகுதியும்தான்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் நல்ல கூட்டணி அமையும். வேண்டுமென்று திட்டமிட்டு, சிலர் விஷமத்தனமான பிரசாரத்தை பரப்புகின்றனர். அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவில் வரும்.
அ.தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்கள், மக்களுக்காக உழைப்பர்; தமிழகத்தின் குரல் பார்லிமென்டில் ஒலிக்க செய்வர். கடந்த 2014 தேர்தலில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் 37 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மக்கள் குரலை பார்லிமென்டில் ஒலிக்க செய்தனர். காவிரிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க, மத்திய அரசு தாமதம் செய்தபோது, மத்திய அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் 37 எம்.பி.,க்கள் குரல் கொடுத்ததுடன், சபையை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் 37 பேர், 16,619 கேள்விகளை கேட்டனர். தற்போது, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் 38 பேர்உள்ளனர்.
இதுவரை தமிழகத்தின் பிரச்னையை எழுப்பவில்லை; 9,695 கேள்விகள் மட்டும் கேட்டுள்ளனர். யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தி.மு.க.,வினர் முன்பு 'கோ பேக் மோடி' என்றனர். இப்போது, 'வெல்கம் மோடி' என்கின்றனர். இதுதான் ரகசிய உடன்பாடு. நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாததாக, தி.மு.க., அரசு உள்ளது. களத்தில் எங்களுக்கு எதிரி இல்லை. அ.தி.மு.க.,வை தேர்ந்தெடுக்க, மக்கள் தயாராகி விட்டனர்.
'இண்டியா' கூட்டணி வண்டியில், ஒவ்வொரு டயராக கழன்று போகிறது. ஒழுங்காக போய் சேருமா என்பது கடவுளுக்குதான் தெரியும்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பார்வை உள்ளது. அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. எந்த கட்சி எங்கு இருக்கிறது எனப் பொறுத்திருந்து பாருங்கள். ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ஏற்கனவே, தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது. நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.