Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து கூடாது: கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை

போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து கூடாது: கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை

போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து கூடாது: கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை

போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து கூடாது: கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை

UPDATED : ஜூலை 03, 2025 11:44 AMADDED : ஜூலை 03, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'காதல் மற்றும் கலப்பு திருமண விவகாரங்களில், போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது' என்பது உட்பட, 35 கட்டளைகளை போலீசார் பின்பற்ற வேண்டும் என, மாநில சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவு:

* புகார்கள் மீது, உடனடியாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். சி.எஸ்.ஆர்., எனப்படும், புகார் மனு ஏற்பு ரசீது வழங்க வேண்டும். இதில் தாமதம் கூடாது. புகார் அளிக்க வருவோரிடம், பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்றோ சொல்லி அலைக்கழிக்கவோ, திரும்பி அனுப்பவோ கூடாது

* போலீஸ் நிலையங்களில், எப்போதும் போலீசார் இருக்க வேண்டும்

* கோயில்களில் சுவாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது போன்ற நிகழ்வுகளில், ஜாதி ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

* முக்கிய பாதுகாப்பு பணிகளில், பெண் போலீசாரை நியமிப்பதை தவிர்க்க வேண்டும்

* சாலை மறியல், போராட்டம் போன்றவற்றின் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசாருக்கு, தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். தேவையின்றி லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

* முடிந்த அளவு பெண் போலீசார், அவர்களின் சொந்த ஊரிலேயே பணிபுரியுமாறு, பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கர்ப்பிணி, குழந்தைகள் பெற்ற பெண் போலீசாருக்கு, அவர்கள் கேட்கும் இடத்திற்கு பணி மாறுதல் வழங்க வேண்டும்

* திருட்டு, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, ஆதாயக்கொலை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்

* போலீசார் முதல் அதிகாரிகள் வரை, அனைவரும் சுய ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும்

* விசாரணை கைதிகளை, தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. அனுபவம் இல்லாத போலீசாரை, சிறப்பு மற்றும் தனிப்படையில் அமர்த்தக் கூடாது

* திருட்டு வழக்குகளை, உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முழுமையான பறிமுதல் என்ற பெயரில், விசாரணை கைதிகளை துன்புறுத்துதல் கூடாது

* விசாரணையின்போது, சிறப்பு மற்றும் தனிப்படை போலீசார், பொறுப்பு அதிகாரி இல்லாமல், தனிப்பட்ட முறையில் விசாரிக்கக் கூடாது

* ஒரு நபரை மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து விசாரிக்கக்கூடாது. தேவையின்றி துன்புறுத்த கூடாது

* 'லாக் அப்' மரணம் மற்றும் வன்முறை இருக்கக் கூடாது

* போலீஸ் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் எதுவும் இருக்கக் கூடாது.

* வாகன சோதனையின் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பமாக செல்வோரிடம், வாகன சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது

* எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில், கடந்த ஆண்டை விட அதிகமான சிலைகளை வைக்க அனுமதிக்க கூடாது. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

* காதல் மற்றும் கலப்பு திருமண விவகாரங்களில், போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது

இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us