Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு

திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு

திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு

திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு

UPDATED : செப் 17, 2025 09:19 PMADDED : செப் 17, 2025 06:57 PM


Google News
Latest Tamil News
கரூர்: '' திராவிடம் என்றால் என்னவென தெரியாது எனக்கூறியவர் அதிமுகவுக்கு தலைமை வகிக்கிறார். இது வெட்கக்கேடு,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடைச்சல்


கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்த கொள்கை என்பது மக்களுக்கு தெரியும். 2 ஆயிரம் ஆண்டுகளாக அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடி கொண்டு உள்ளது. அந்த கொள்கையின் முகம் பாஜ. மத்திய பாஜ அரசுடன் தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறோம்.

2 நாளுக்கு முன்பு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், 'அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜ' என்ற உண்மையை பேசியுள்ளார். அந்தக் கைப்பாவை அரசை தூக்கி எறிய திமுக தான் காரணம் என்று நம் மீது பாஜ வன்மத்தை கொட்டுகிறது. அதனால் தான் நமக்கு எவ்வளவோ குடைச்சலை கொடுக்கின்றனர். அதனை பார்த்து முடங்குவோம் என நினைத்தனர். திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா?

வயிற்று எரிச்சல்


நாட்டில் முதன்முறையாக மாநில கட்சி ஆட்சியை பிடித்த வரலாற்றை உருவாக்கியது நாம் தான். 74 ஆண்டுகால வரலாறு நமக்கு உள்ளது. எத்தனையோ பேர் திமுகவை அழிப்போம் என்றனர்.

இப்போது கூட திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்கின்றனர். எதை மாற்றப்போகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சியை மாற்றி பின்னோக்கி கொண்டு போகப்போகின்றனரா? நமது கொள்கையை விட சிறந்த கொள்கையை யாரும் பேசுகின்றனரா? மாற்றம் மாற்றம் என பேசியவர்கள் எல்லாரும் மாறினார்கள்; மறைந்து போனார்கள்.

எவ்வளவோ நெருக்கடிக்கு மத்தியில், மாநிலத்தில் ஆட்சி பொறுப்பேற்று தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சியை பார்த்து சிலருக்கு வயிறு எரிகிறது.

வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவர்களின் கண்ணீர், ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர். இபிஎஸ் ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாமல், தமிழக உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் தெம்பு திராணி இல்லாமல் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளார். பாஜ தன்னுடன் இருக்கிறது என இப்பவும் வாய்த்துணுக்குடன் பேசி கொண்டு உள்ளார்.

வெட்கக்கேடு


எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பு இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி கொண்டு உள்ளார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் இபிஎஸ் தரத்தை மக்கள் தெளிவாக எடை போடுவார்கள் என நானும் விட்டுவிட்டேன். ரெய்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டார். திராவிடம் என்றால் என்ன என கேட்டபோது அதெல்லாம் எனக்கு தெரியாது சொன்னவர், அதிமுக தலைமை பொறுப்பில் உள்ளார். இதுதான் வெட்கக்கேடு

அதிமுக துவங்கிய போது தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றனர். தற்போது இபிஎஸ், அடிமையிசம் என மாற்றி அமித்ஷாவே சரணம் என மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என கேட்பார்கள். நேற்று டில்லியில் கார் மாறி மாறி போன இபிஎஸ்-ஐ பார்த்து, காலில் விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு என கேட்கின்றனர்.

இதில் அவரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். தேவையில்லை தான். ஆனால், மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பு அளித்து பதில் அளிக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. வெறும் சொல்லால் அல்ல செயல் மூலம் சொல்கிறோம்.

நோ என்ட்ரி

டில்லியில் இருந்து பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். இங்கு அடக்குமுறைக்கு நோ என்ட்ரி தான். ஆதிக்கத்துக்கு நோ என்ட்ரி தான். திணிப்புக்கு நோ என்ட்ரி தான். மொத்தத்தில் பாஜவுக்கு நோ என்ட்ரி தான். பாஜவை தடுக்கவில்லை என்றால், மாநிலங்களே இருக்கக்கூடாது என நகர்வார்கள். காஷ்மீரில் சோதனை செய்து பார்த்துவிட்டனர். தற்போது உரிமைப்போர் நடத்தி நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us