Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விக்கிரவாண்டி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால் பா.ம.க., குஷி!:

விக்கிரவாண்டி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால் பா.ம.க., குஷி!:

விக்கிரவாண்டி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால் பா.ம.க., குஷி!:

விக்கிரவாண்டி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால் பா.ம.க., குஷி!:

UPDATED : ஜூன் 18, 2024 01:52 PMADDED : ஜூன் 16, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க., ஒதுங்கிக் கொண்டதால், அதிக ஓட்டுகளை அள்ளிவிடலாம் என, பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., குஷி அடைந்துள்ளது. தே.மு.தி.க.,வும் நழுவியதால், ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகள் தங்களுக்கு ஆதரவாக ஒருங்கிணையும் என்ற நம்பிக்கையில் பா.ம.க., உள்ளது. இதனால், ஆளுங்கட்சி வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.

தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இதற்கான மனுதாக்கல் 14ம் தேதி துவங்கினாலும், இன்று முதல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., சார்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி களமிறக்கப்பட்டு உள்ளார். தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில், டாக்டர் அபிநயா வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

விரும்பவில்லை


அ.தி.மு.க., சார்பில், பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், அக்கட்சி பல்வேறு காரணங்களை கூறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது.

அ.தி.மு.க.,வை தொடர்ந்து, அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வும் இடைத்தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கியுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, 'தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களிலும் தே.மு.தி.க., போட்டியிட்டு உள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக ரீதியாக, நேர்மையாக நடக்க வேண்டும்.

'ஆட்சியாளர்களின் அதிகாரத்தால், தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகின்றன. தொண்டர்களின் உழைப்பு, நேரம், பணம் என, அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க., புறக்கணிக்கிறது' என்று கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., புறக்கணித்துள்ளதால், பா.ம.க., தலைமையும், தொண்டர்களும் குஷி அடைந்துள்ளனர்.

வியூகம்


தங்களது ஓட்டு வங்கியை நிரூபிக்கும் தேர்தலாக பணியாற்றவும் அவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். இதன் வாயிலாக, 2026 சட்டசபை தேர்தலில், கூட்டணி தலைமையிடம் அதிக அளவிலான தொகுதிகளை கேட்டு பெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அ.தி.மு.க., போட்டியில் இருந்து விலகியதோடு, அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வும் ஒதுங்கியதால், அதனால் விளையக்கூடிய மொத்த பலனும் பா.ம.க., பக்கம்

சென்றால், அது, தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என, ஆளும்கட்சி வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.

தேர்தல் பணியாற்றுவதற்கு, ஒன்றியம் வாயிலாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அ.தி.மு.க., - தே.மு.தி.க., ஓட்டுக்கள் கைமாறும்பட்சத்தில், பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கிடைத்த ஓட்டுக்களை விட குறைந்த ஓட்டுக்கள் கிடைத்தால், முதல்வரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஆளும் கட்சியினர் பதற்றத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

இடைத்தேர்தலில் போட்டியிடாமல், அ.தி.மு.க., ஒதுங்கியதற்கு, பா.ஜ.,வுடன் இருக்கும் மறைமுக உறவு தான் காரணம் என, தி.மு.க., கூட்டணி கட்சிகள் விமர்சிக்கத் துவங்கி உள்ளன. காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரமும், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும், அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ.,வுடனான மறைமுக உறவு தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., 72,188 ஓட்டுக்களும், அ.தி.மு.க., 65,365 ஓட்டுக்களும், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க., 32,198 ஓட்டுக்களும் பெற்றுள்ளன.

தி.மு.க., - அ.தி.மு.க., இடையிலான ஓட்டு வித்தியாசம் குறைவு. தீவிரமாக முயன்றால், இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும். ஆயினும், அப்படியொரு நிலை எடுத்து தீவிரமாக களத்தை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாரில்லை என்பது நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அ.தி.மு.க., - தே.மு.தி.க., அறிவித்ததும், தி.மு.க., தரப்பு கலக்கம் அடைந்திருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க.,- நாம் தமிழர் கட்சி என, நான்கு முனைப்போட்டி இருந்தால், எதிர்ப்பு ஓட்டுக்கள் மூன்று பக்கம் பிரிந்து, தி.மு.க.,வுக்கு எளிதாக வெற்றி கிட்டும் என்று எதிர்பார்த்தனர். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., தேர்தல் புறக்கணிப்பு, மும்முனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில், அ.தி.மு.க.,வின் முகமாக உள்ள முக்கிய புள்ளிக்கும், வேட்பாளரை நிறுத்துவதில் ஆர்வம் இல்லை. இதுகுறித்து கட்சி தலைமை கேட்டபோது, 'லோக்சபா தேர்தலில், விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருக்காக, அதிக பணத்தை செலவு செய்து விட்டேன்' என்று கூறியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க., முக்கிய புள்ளியின் உறவினரும், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலருமான ஒருவரை, அக்கட்சியானது தலைமை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டு இருந்தது. அவரை நிறுத்தினால், தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க., முக்கிய புள்ளி தயாராக இருந்தார். ஆனால், உஷாரான பா.ம.க., திட்டத்தை மாற்றி, பலமான வேட்பாளரை நிறுத்தி விட்டது. இதுவும், அ.தி.மு.க., தேர்தல் புறக்கணிப்புக்கு முக்கிய காரணம்.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தி.மு.க.,வை வீழ்த்தும் போர்


விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ம.க.,வின் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மறைந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்திக்கு பதிலாக, விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக, வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட தி.மு.க.,வுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காரணமாக இருந்த, அதற்காக போராடியவர்களின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கும் தி.மு.க.,வின் துரோகத்திற்கும் கணக்கு தீர்க்கும் களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தினால் தான், அடுத்த தேர்தலுக்கு முன், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க., அரசு முன்வரும். அதனால் தான், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை போர் என்று கூறுகிறேன்.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us