பயிர் செய்த விவசாயிகளுக்கு பலன் தராத பாசுமதி
பயிர் செய்த விவசாயிகளுக்கு பலன் தராத பாசுமதி
பயிர் செய்த விவசாயிகளுக்கு பலன் தராத பாசுமதி
ADDED : ஜூன் 15, 2025 07:51 AM

சென்னை : தமிழகத்தில் பாசுமதி ரக நெல் சாகுபடி செய்த விவசாயிகள், அரிசியாக மாற்ற ஆலைகளில் வசதி இல்லாததால், அறுவடை செய்த நெல்லை மூட்டை கட்டி சும்மா போட்டு வைத்துள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், அஸாம், டில்லி, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பாசுமதி நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் பாசுமதி அரிசிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில், 70 சதவீத பாசுமதி அரிசி, இந்தியாவில் தான் விளைகிறது. இங்கிருந்து சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஏமன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, சாதாரண ரகம், சன்ன ரகம் என, நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வடமாநிலங்களை போலவே பல மாவட்டங்களில், பாசுமதி நெல் சாகுபடி செய்வதற்கு உகந்த சூழல் உள்ளது. ஆனால், இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.
இந்நிலையில், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சோதனை முயற்சியாக, பாசுமதி நெல்லை சாகுபடி செய்துள்ளனர். எதிர்பார்த்ததை விட பாசுமதி நெல் சிறப்பாக விளைந்துள்ளது. அவற்றை மூட்டை பிடித்து வைத்துள்ளனர். ஆனால், அரிசியாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நான்கு மாதங்களாக நெல் மூட்டைகள் கிடப்பில் உள்ளன. சோதனை முயற்சியில் இறங்கிய விவசாயிகளுக்கு, இது சங்கடத்தை தந்துள்ளது.
ராணிப்பேட்டை விவசாயி கணபதி:
எனக்கு திருவண்ணாமலை மாவட்டம், புலவன்பாடியில் நிலம் இருக்கிறது. டில்லியின் பூசாவில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் கண்டு பிடித்த, 1718 என்ற ரக பாசுமதி நெல் விதையை வாங்கி வந்து, மூன்று ஏக்கரில் பயிரிட்டேன். அதிலிருந்து, 60 மூட்டை நெல் கிடைத்தது.
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் உள்ள அனைத்து அரிசி ஆலைகளுக்கும் சென்று அரிசியாக்கி தருமாறு கேட்டேன். பாசுமதி அரிசியை அரவை செய்வதற்தான கட்டமைப்புகள் இல்லை என்று கூறி விட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் புட் டெக்னாலஜி அண்டு ரிசர்ஜ் சென்டரிலும் விசாரித்தேன். அங்கும், மிக நீளமான பாசுமதி நெல்லை அரவை செய்வதற்காக வசதிகள் இல்லை என்று கூறி விட்டனர்.
இதனால், அறுவடை செய்த நெல் மூட்டைகளை, நான்கு மாதங்களாக கிடங்கில் வைத்துள்ளேன். அரிசி ஆக்குவதற்கான வசதிகள் இருந்தால், என்னைப் போல பல விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக வருவாய் பெருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்:
நாட்டில் உற்பத்தியாகும் பாசுமதி அரிசி, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் பல நாடுகள், இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி வாங்க விரும்புகின்றன. ஆனால், வடமாநில விவசாயிகள் சாகுபடிக்கு பயன்படுத்தும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம், பாசுமதி அரிசியிலும் உள்ளது.
இதைக்காரணம் காட்டி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி செய்ய அனுமதிப்பது இல்லை. எனவே, இயற்கை முறையில் பாசுமதி அரிசியை சாகுபடி செய்யலாம் என்ற யோசனை எனக்கு வந்தது.
டில்லியின் பூசாவில் இருந்து, 1718 ரக பாசுமதி நெல் விதையை வாங்கி வந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பயிரிட்டேன். மற்ற ரக பாசுமதி அரிசி, 7.8 மி.மீ., நீளத்திற்கு இருக்கும். நான் சாகுபடி செய்த பாசுமதி அரிசி, 12 மி.மீ., அளவிற்கு இருந்தது.
அரவை செய்து அரிசியாக்க ஓராண்டாக அலைந்தேன். பின், புழுங்கல் அரிசியாக மாற்றி அரவை செய்தோம்; அதில், துண்டுகளாக கிடைத்த அரிசியை சமைத்து சாப்பிட்டு காலி செய்தோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரிசி ஆலைகளின் ஆலோசகர் முனுசாமி:
நாட்டில், 1718 என்ற ரக பாசுமதி நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற ரக பாசுமதி நெல் பயிர்கள், ஐந்தரை அடிக்கு மேல் வளரும். ஆனால், 1718 ரகம் மூன்று முதல் மூன்றரை அடி தான் வளரும். பயிரின் தண்டு கரும்பு போல கனமாக இருக்கும். மழை, சூறைக் காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பெரிய அளவில் பாதிக்காது.
பூச்சி தாக்குதல்களால் பெரிய அளவில் பயிர் பாதிக்காது. இதிலிருந்து, 12 மி.மீ., நீளத்திற்கு பாசுமதி அரிசி கிடைக்கும். பாசுமதி நெல் கொள்முதல் விலையாக, மத்திய அரசு கிலோ, 25 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தனியார் வியாபாரிகள், 50 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
ஒரு கிலோ அரிசி, இந்தியாவிலேயே, 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். தமிழகத்திலும் இதுபோன்ற பாசுமதி ரகங்களை சாகுபடி செய்வதை, வேளாண் துறை ஊக்குவிக்க வேண்டும்.
அரிசி ஆலைகளில், பாசுமதி அரிசி அரவை செய்யும் கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். வேளாண் வணிகப் பிரிவு வாயிலாக, இதற்கென சிறப்பு அரிசி ஆலைகளையும், தொழில் முனைவோர் வாயிலாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிருஷ்ணகிரியில் ஒரு ஆலையில்...
-துளசிங்கம்,மாநில தலைவர்,
நெல், அரிசி மொத்த வணிகர் சங்கங்களின் சம்மேளனம்