சென்னையில் பவன் கல்யாண் வெல்ல முடியுமா: சேகர்பாபு அமைச்சர் சவால்
சென்னையில் பவன் கல்யாண் வெல்ல முடியுமா: சேகர்பாபு அமைச்சர் சவால்
சென்னையில் பவன் கல்யாண் வெல்ல முடியுமா: சேகர்பாபு அமைச்சர் சவால்
ADDED : ஜூன் 24, 2025 06:17 AM

சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் அளித்த பேட்டி:
மதுரையில் நடந்தது, அரசியல் மாநாடு என்பது தான் பக்தர்களின் பார்வை. முருகன் மாநாடு, கூடி கலைந்த மேகக்கூட்டம். ஒருநாள் கூத்து அன்றோடு முடிந்தது.
அறநிலையத் துறை எப்படி உருவானது; அதன் கீழ், கோவில்கள் எப்படி வந்தன என்பதை புத்தகமாக அச்சடித்து ஒரு மாதத்தில் வெளியிட உள்ளோம்.
கோவில் வருமானத்தை கொள்ளையடித்த கூட்டங்களை வெளியேற்றவே, அறநிலையத்துறை உருவாக்கப்பட்டு, 1959ல் சட்டம் கொண்டுவரப்பட்டது.
திருப்பணிகளை மேற்கொண்டு வரும் நாங்கள் வேண்டுமா, அல்லது மேடை போட்டு இனம், மதம், மொழியால் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் சங்கிகள் வேண்டுமா, என்பதை, 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு எடுப்பார்கள்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதன்பின் என்ன வேண்டுமானாலும் அவர் பேசட்டும். நாங்கள் கேட்கிறோம்.
ராஜ்ஜியத்தை ஆளும் முதல்வர், பா.ஜ.,வுக்கு நிச்சயமாக பூஜ்ஜியத்தை வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேகர்பாபுவுக்கு பதிலளித்து தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, முன்னாள் செய்தி தொடர்பு செயலர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஆந்திரா அல்லது டில்லியில், ஒரு தொகுதி யில் போட்டியிட்டு, சேகர்பாபு வெற்றி பெற்று வந்து எதைச் சொன்னாலும், அதை நாங்கள் கேட்கத் தயாராக இருக்கிறோம்.
அதுவரை, தி.மு.க.,வினர் வெற்று சவடால் விடுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.