மீன்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண மத்திய அரசு திட்டம்
மீன்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண மத்திய அரசு திட்டம்
மீன்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண மத்திய அரசு திட்டம்
ADDED : செப் 24, 2025 03:41 AM

சென்னை: ''உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது,'' என, மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும், உவர் நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் சார்பில், 12வது 'ஆசிய மீன்வள நோய்கள்' குறித்த சர்வதேச நான்கு நாள் மாநாடு, சென்னை எம்.சி.ஆர்., நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று துவங்கியது.
இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பங்கேற்ற, மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மீன்வளத்துறை பெரும் பங்காற்றுகிறது. உலகளாவிய மீன்வள உற்பத்தியில், இந்தியாவின் பங்கு 59 சதவீதமாக உள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது. மீன் உற்பத்தியின்போது, மீன்களுக்கு ஏற்படும் நோய்களால், ஆண்டுதோறும், 10,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
இம்மாநாட்டில், அதற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைப் பொது இயக்குநர் ஜோய்கிருஷ்ணா ஜேனா கூறியதாவது:
மீன்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலானது. மற்ற விலங்குகள் போல், அவற்றுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகளை, நேரடியாக வழங்க இயலாது.
அவற்றுக்கு, தண்ணீர் வாயிலாக தான், மருந்துகளை வழங்க முடியும். இதனால், அனைத்து மீன்களும் குணமடையும் என உறுதி அளிக்க முடியாது. எனவே, மீன் வளர்ப்பில், சுகாதாரத்தை பேணி, நோய் வரும் முன் காப்பதே சிறந்தது. நோய் மேலாண்மை குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.