முதல்வர் திறந்த புதிய கட்டடம்: மூன்றே நாளில் இடிந்ததால் 'ஷாக்'
முதல்வர் திறந்த புதிய கட்டடம்: மூன்றே நாளில் இடிந்ததால் 'ஷாக்'
முதல்வர் திறந்த புதிய கட்டடம்: மூன்றே நாளில் இடிந்ததால் 'ஷாக்'

தஞ்சாவூர்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டடத்தில், மூன்றே நாளில் கூரையின் சிமென்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் பஞ்., அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. தஞ்சாவூரில் ஜூன் 16ல் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார்.

முன்னதாக, முதல்வர் திறப்பதற்கு முந்தைய நாள் இரவு, புதிய கட்டடத்தின் கூரையில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
அடுத்த நாள் திறப்பு விழா என்பதால், உடனடியாக அவசர கதியில் பெயர்ந்த பூச்சை மீண்டும் பூச்சு வேலை செய்து சீரமைத்தனர்.
அதன்பின், ஜூன் 16ல் முதல்வர் கட்டடத்தை திறந்து வைத்தார். தற்போது அலுவலகத்தில் தளவாடப் பொருட்களை வைப்பதற்காக, நேற்று அலுவலக கட்டடத்தை ஊழியர்கள் திறந்தனர்.
அப்போது, சிமென்ட் பூச்சு மீண்டும் பெயர்ந்து விழுந்திருந்தது. இதனால் உள்ளே செல்ல பயந்து, ஊழியர்கள் நடுங்கினர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.
திருவிடைமருதுார் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டுமான விதிகளை பின்பற்றாத ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும்,உதவி செயற்பொறியாளர் சுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.