ரூ.217 கோடியில் கோவில் கட்டுமானம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு
ரூ.217 கோடியில் கோவில் கட்டுமானம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு
ரூ.217 கோடியில் கோவில் கட்டுமானம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 19, 2025 12:44 AM

சென்னை: மாநிலம் முழுதும், பல்வேறு கோவில்களின் கட்டுமானப் பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 86.7 கோடி ரூபாய் மதிப்பில் அன்னதானக் கூடம்; பூஜை பொருட்கள் விற்பனை நிலையம்; சுதை வேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில்; ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கும், தேர்வீதிக்கும் இணைப்புப்படி கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், குமாரவயலுார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 30.3 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக் கூடம், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில் நீர்த்தேக்க தொட்டி, கழிப்பறைகள், குளியல் அறைகள், முடி காணிக்கை கூடம், அன்னதானக் கூடம் கட்டுதல், குளம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் 14.5 கோடி ரூபாயில், கூடுதல் நிர்வாக கட்டடம்; திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், 12.3 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு நிலை ராஜகோபுரம், ஐந்து நிலை ராஜ கோபுரம் கட்டப்பட உள்ளது.
இவை உட்பட, மொத்தமாக 217 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 49 பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார்.
அத்துடன், உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வாளர் அலுவலகம் உட்பட, 21 கோடி ரூபாய் மதிப்பில், 16 கோவில்களில் திருமண மண்டபம், முடி காணிக்கை மண்டபம் உள்ளிட்ட கட்டடங்களை, முதல்வர் திறந்து வைத்தார்.