Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சுயசான்று கட்டட அனுமதி பெறுவோருக்கு உள்ளாட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார்

சுயசான்று கட்டட அனுமதி பெறுவோருக்கு உள்ளாட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார்

சுயசான்று கட்டட அனுமதி பெறுவோருக்கு உள்ளாட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார்

சுயசான்று கட்டட அனுமதி பெறுவோருக்கு உள்ளாட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார்

ADDED : செப் 17, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
சென்னை; சுயசான்று அடிப்படையில், 'ஆன்லைன்' முறையில் கட்டட அனுமதி பெற்றவர்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் குறைந்த பரப்பளவு வீடுகள் கட்டு வோரிடம், வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி பரப்பளவு வரையிலான வீடுகள் கட்ட, சுயசான்று முறை அமல்படுத்தப்பட்டது. நில உரிமை, கட்டட வரைபடம் போன்ற குறிப்பிட்ட சில ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவேற்றினால் போதும்; கட்டணங்கள் விபரம் தெரிவிக்கப்படும்.

இந்த கட்டணங்களை செலுத்தியவுடன், வரைபட அனுமதிக்கான கடிதம், ஆன்லைன் வழியாக வந்து விடும்.

இந்நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், வீடு கட்டுவோருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது, ஆறு மாவட்டங்களில் மட்டுமே ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளாக, அரசியல் பிரமுகர்கள் பதவியில் இருக்கின்றனர். பிற மாவட்டங்களில், ஊராட்சிகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும், அரசியல் பிரமுகர்கள் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இவர்கள், வீடு கட்டுவோரை நேரில் வந்து கையெழுத்து வாங்குமாறு, நெருக்கடி கொடுப்பதாக புகார் கூறப்படுகிறது.

இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள், சுயசான்று கட்டட அனுமதி பெற்றவர்களை அழைத்து, தங்களிடம் முத்திரை மற்றும் கையெழுத்து பெற வேண்டும் என, நிர்ப்பந்திக்கின்றனர். நேரில் வரவில்லை என்றால், கட்டட பணிகளை தொடர அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்ல வேண்டாம்


நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிகாரிகளால் மக்கள் அலைக்கழிக்கப்பட கூடாது என்பதற்காக தான் இதுபோன்ற திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கான விதிமுறைகளின்படி, 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படும் அனுமதி கடிதமே இறுதியானது. அதில் கையெழுத்து, முத்திரை போடுகிறோம் என்று, உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் செல்ல வேண்டாம். இதுபோன்ற நெருக்கடி வந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மீது மக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us