கடத்த முயன்ற சில்வர் ஓக் மரங்கள் பறிமுதல்
கடத்த முயன்ற சில்வர் ஓக் மரங்கள் பறிமுதல்
கடத்த முயன்ற சில்வர் ஓக் மரங்கள் பறிமுதல்
UPDATED : பிப் 06, 2024 07:38 AM
ADDED : பிப் 05, 2024 09:35 PM

கூடலுார்;கூடலுார் ஓவேலி செக்சன்-17 நிலத்திலிருந்து, வெட்டி கடத்த முயன்ற சில்வர் ஓக் மர துண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, மூவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார் ஓவேலி பகுதியில், இரண்டு வாரங்களுக்கு முன், காட்டெருமை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது.
இது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். வாகன சோதனையையும் தீவிர படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, ஓவேலி சாலையில் உள்ள வன சோதனை சாவடியில், வனக்காப்பாளர் அருண் வாகன சோதனை மேற்கொண்டு வந்தார்.
இரவு 10:00 மணிக்கு, ஓவேலி பகுதியிலிருந்து கூடலுார் நோக்கி வந்த மினி லாரி, வன சோதனை சாவடி அருகே, உள்ள சிமென்ட் சாலை வழியாக, கூடலுார் நோக்கி செல்ல முயன்றது. உஷாரடைந்த வனத்துறையினர், அந்த லாரியை பிடித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், சில்வர் ஓக் மரத்துண்டுகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
லாரியுடன் அதனை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் அனில், 31, மற்றும் சுலைமான், 53, அறிவழகன், 41, ஆகியோரை பிடித்தனர்.
வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் சுரேஷ், வனவர்கள் சுபேத், சுதிர் ஆகியோர், பிடிபட்ட மூவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
வனத்துறை விசாரணையில், 'கேரளாவை சேர்ந்த சந்திரன் என்பவரின் செக்சன்-17 நிலத்தில் உள்ள காபி தோட்டத்திலிருந்து, 29 சில்வர் ஓக் மரங்களை வெட்டி, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி கடத்தி வருவது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,' என்றனர்.


