Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரிப்பு: அன்புமணி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரிப்பு: அன்புமணி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரிப்பு: அன்புமணி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரிப்பு: அன்புமணி

ADDED : செப் 30, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரித்து விட்டது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகில் தாய் கண் எதிரிலேயே இளம்பெண்ணை இரு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இன்னொரு வேதனையான எடுத்துக்காட்டு இது தான். சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு இந்த அளவுக்கு சிதைத்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குவாகன டிரைவர் ஒருவர், திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார். திருவண்ணாமலைக்கு முன்பாக ஏந்தல் என்ற இடத்தில் சரக்குவாகனத்தை மறித்து சோதனை நடத்திய இரு காவலர்கள், அதில் இருந்த இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர். சந்தைக்கு சென்று திரும்பும் போது அவர்களை அழைத்துச் செல்லும்படி சரக்குவாகன டிரைவரிடம் கூறியுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், தாயின் கண் எதிரிலேயே 19 வயது மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு இது தான் சான்று. காவலர்களின் கடமை பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பது தான். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களே சரக்குவாகனத்தில் சென்ற இரு பெண்களை மிரட்டி, இறக்கி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள் என்றால் காவல்துறையும், சட்டம் - ஒழுங்கும் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். காவல்துறையை இந்த அளவுக்கு சீர்குலைத்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 54 சதவீதம் அதிகரித்து விட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதைப் பற்றியெல்லாம் திமுக அரசு கவலைப்படாமல் இருந்ததன் விளைவு தான் இந்த கொடுமை ஆகும்.

தமிழ்நாட்டில் வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்திருப்பது தான் திமுக அரசின் சாதனை ஆகும். சட்டம் - ஒழுங்கு சீர்குலைவில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ள ஒரே வழி திமுக அரசை அகற்றுவது தான். அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிக்கப் போவது உறுதி.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us