உளறிக் கொட்டிய துணை முதல்வர்: கொந்தளித்தார் மோடி
உளறிக் கொட்டிய துணை முதல்வர்: கொந்தளித்தார் மோடி
உளறிக் கொட்டிய துணை முதல்வர்: கொந்தளித்தார் மோடி

அரசியல்வாதிகள் என்றாலே ஏதாவது பேசிக்
கொண்டேஇருக்க வேண்டும்; அது, மீடியாவிலும் வந்தால் தான் அவர்களுக்கு
மகிழ்ச்சி. ஆனால், என்ன பேசுகிறோம் என்பது குறித்து அவர்கள் என்றுமே
கவலைப்பட்டதே இல்லை.
இப்படி ஒரு அரசியல்வாதி பேசியது, இரு
நாடுகளுக்கு இடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது. இப்படி பேசியவர்,
பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி. 'நேபாளம்,
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அமைதியாக இருந்திருக்கும்.
நேபாளம் தனி நாடாவதற்கு, காங்கிரஸ் தான் காரணம்' என, பேசிவிட்டார்.
பீஹாரில், பா.ஜ., மற்றும் முதல்வர் -நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்
கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இவர், இப்படி பேசியதைக் கேட்ட
பிரதமர் நரேந்திர மோடி கோபத்தில் கொந்தளித்து, 'தேவையில்லாத, தனக்கு
தெரியாத விஷயங்களில் எதுவும் பேச வேண்டாம் என உத்தரவிட்டும், துணை முதல்வர்
ஏன் பேசினார்' என, கட்சியின் தேசிய தலைவர் நட்டாவிடம் கேட்டாராம்.
'இனி யாரும் எதுவும் பேசக்கூடாது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து
எந்தவித கருத்தும், கட்சியினர் தெரிவிக்க கூடாது. இது, மிகவும்
'சென்சிடிவ்' ஆன விஷயம்' என மோடி சொல்ல, உடனே இதை உத்தரவாக கட்சியினருக்கு
தெரிவித்தாராம் நட்டா.
நேபாளத்தில் போராட்டம் வெடித்து அந்த
நாட்டின் பிரதமர் பதவி விலகினார்; பலர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் உச்ச
நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, தற்காலிக பிரதமராக
நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே
கலாசார உறவு பல நுாற்றாண்டுகளாக தொடர்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே,
1,751 கி.மீ., துார எல்லை, பீஹார், மேற்கு வங்கம், சிக்கிம், உ.பி.,
மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் உள்ளது.
அதிலும் பீஹார் --
நேபாளம் இடையே, 729 கி.மீ., துார எல்லை உள்ளது. பீஹார் மக்கள், நேபாள
மக்கள் இடையே திருமணம், வியாபாரம் என பல தொடர்புகள் உள்ளன. அத்துடன்,
இவர்களுடைய மொழியும் ஏறக்குறைய ஒன்று தான். விரைவில் பீஹார் சட்டசபை
தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வரின் பேச்சு பிரச்னையை
ஏற்படுத்தும் என்பதால் மோடி கோபப்பட்டாராம்.