குடந்தையில் மாசி மக விழா தீர்த்தவாரி மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்
குடந்தையில் மாசி மக விழா தீர்த்தவாரி மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்
குடந்தையில் மாசி மக விழா தீர்த்தவாரி மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED : பிப் 24, 2024 09:51 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில், ஆண்டுதோறும் மாசிமக விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு மாசிமக பெருவிழாவை முன்னிட்டு, காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கெüதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய ஐந்து சிவாலயங்களில் பிப்., 15ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இத்துடன், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் ஏக தின உற்சவமாக நேற்று விழா நடந்தது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று, மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் பத்து சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி - அம்பாள் எழுந்தருளி, மதியம் 12:30 மணிக்கு அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
நான்கு கரைகளிலும், குளத்திலும் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாலாலயமும், கம்பட்ட விஸ்வநாதர் கோவிலில் கொடி மரம் திருப்பணிக்கான பாலாலயமும் செய்யப்பட்டுள்ளதால், மாசிமக விழா நடைபெறவில்லை.
வைணவத் தலம்:
வைணவத் தலங்களான சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய கோவில்களில், கடந்த பிப்., 16ல் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை சக்கரபாணி கோவில் திருத்தேரோட்டம் நடந்தது.
பக்தர்கள் பலர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் சாரங்கபாணி கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. மாசிமகத்தை முன்னிட்டு, துறவிகள் சார்பில் மகாமக குளத்தில் பெரு ஆரத்தி விழா நடந்தது.