தேசிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மாற்றி யோசிக்க தன்கர் வேண்டுகோள்
தேசிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மாற்றி யோசிக்க தன்கர் வேண்டுகோள்
தேசிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்கள் மாற்றி யோசிக்க தன்கர் வேண்டுகோள்

புதுச்சேரி:''தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்கள், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதி, நேற்று புதுச்சேரி பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நீண்ட இடைவெளிக்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட நம் தேசிய கல்விக்கொள்கை - 2020, தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது இந்தியாவின் கல்வி பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணம்.
இது பல்கலைக்கழகங்களை பன்முகத்தன்மை, விமர்சன சிந்தனை, திறன் மேம்பாடு மற்றும் புதுமைகளை வளர்க்க அழைக்கிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், தங்கள் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உறுதிப்பாடு
தேசிய கல்விக்கொள்கை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நம் இளைஞர்கள் தங்கள் திறமையையும், ஆற்றலையும் முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கிறது. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
பிரிவினைவாதமும், மொழி கற்றலும் வேறுபட்ட துருவங்கள்.
பாதுகாப்பு துறையில், இந்தியாவின் நிலைப்பாடு வியத்தகு முறையில் முன்னேறியுள்ளது. வான்வழி தாக்குதல்கள் முதல் சமீபத்திய ஆப்பரேஷன் சிந்துார் வரை, இந்திய உறுதிப்பாடு, தெளிவு மற்றும் தைரியத்தை காட்டியுள்ளது.
இந்த வெற்றிக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டு திறன்களை பயன்படுத்தியதே காரணம். ஒரு நாடு தன் மக்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஆத்ம நிர்பந்தத்தின் வாயிலாக அதை செய்ய வேண்டும். நம் நாடு அதைத்தான் துல்லியமாக செய்துள்ளது.
சட்டவிரோத இடம் பெயர்வு, வெடிகுண்டு கலாசாரம் போன்றவை ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது எல்லைகளை மீறுவது மட்டுமின்றி, இறையாண்மையை அழிப்பது, சமூக ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைப்பதாக உள்ளது.
பெருமைப்படுத்துங்கள்
சட்டவிரோத வங்கதேச குடியேறிகளை அடையாளம் காண, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு இந்த பிரச்னையின் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது. 1951 மற்றும் 2011க்கு இடையில், இப்பகுதியில் பழங்குடி மக்கள் தொகை கடுமையாக குறைந்தது. அதே நேரத்தில் சிறுபான்மையினரின் பங்கு இரட்டிப்பானது.
இது போர்க்குணம், தீவிரவாதம், சமூக அமைதியின்மையை இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகிறது. மக்கள் விரோத சக்திகளின் ஊடுருவல் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
இளைஞர்கள் தங்கள் சவால்களை உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. அம்பேத்கரின் சிந்தனையாக அவர் கூறியபடி, இந்தியர்களாகிய நம் விசுவாசம் சிறிதளவும் பாதிக்கப்படக்கூடாது. மதம், கலாசாரம், மொழியை தாண்டி நாம் முதலிலும், கடைசியிலும் இந்தியர்கள் என்பதை மனதில் கொண்டு தைரியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் முன்னேறுங்கள். நாட்டை பெருமைப்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.