தி.மு.க., கூட்டணியை தோல்வி அடைய செய்வோம் தேனியில் தினகரன், பன்னீர் செல்வம் உறுதி
தி.மு.க., கூட்டணியை தோல்வி அடைய செய்வோம் தேனியில் தினகரன், பன்னீர் செல்வம் உறுதி
தி.மு.க., கூட்டணியை தோல்வி அடைய செய்வோம் தேனியில் தினகரன், பன்னீர் செல்வம் உறுதி
ADDED : பிப் 25, 2024 12:54 AM

தேனி:லோக்சபா தேர்தலில் 'தி.மு.க., கூட்டணியை தோல்வி அடைய செய்வோம்' என தேனியில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பேசினார்.
தேனியில் அ.ம.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசியதாவது: பழனிசாமியின் நான்கரை ஆண்டு ஆட்சியில் அனைத்திலும் ஊழல் இருந்ததால் மக்கள் ஆட்சியை தி.மு.க.,விடம் கொடுத்தார்கள். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்ற வில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரி ஸ்டாலினை மிஞ்சிவிட்டார். தி.மு.க., மீது மக்கள் கோபமாக உள்ளனர்.
பன்னீர் செல்வத்தின் உரிமை மீட்பு குழு நம்முடன் சேர்ந்துள்ளது. நாங்கள் சிறப்பான கூட்டணியை தமிழகத்தில் அமைத்திடுவோம். தி.மு.க., கூட்டணியை தோல்வி அடைய செய்வோம். ஆள்பவர்களுக்கும், ஆட்சி செய்தவர்களுக்கும் சரியான போட்டியாக நமது கூட்டணி இருக்கும். தி.மு.க., கூட்டணியில் காங்., கம்யூ., கட்சிகளால் என்ன பயன் உள்ளது. கம்யூ., முல்லைபெரியாறு அணையில் புதிய அணை கட்டி மதுரை மண்டலத்தை வறட்சி பகுதியாக மாற்ற முயற்சிக்கிறது. கர்நாடகாவில் காங்., மேகதாது கட்ட முயற்சிக்கிறது.
கச்சத்தீவு தாரை வார்ப்பு, காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது, நீட்தேர்வை கொண்டு வந்தது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் என அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் வந்தவை. இலங்கை தமிழரை சிங்கள ராணுவம் கொன்றது தி.மு.க., காங்., ஆட்சியில். ஆனால் இவர்கள் தமிழர்களை காப்போம் என்கின்றனர்.
ஸ்டாலினும் பழனிசாமியும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர். ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து வெற்றி பெற்றதற்காக வருந்தினேன். இடைத்தேர்தலில் என்னை போட்டியிட கூறியது சசிகலா தான். நான் போட்டியிட்டதால் பழனிசாமி பயந்தார், இவ்வாறு பேசினார்.
இதே மேடையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியது:
கட்சி விதிகளை திருத்தி பழனிசாமி போலி பொதுச்செயலாளராக ஆகி உள்ளார். சசிகலாவிடம் ஊர்ந்து சென்று பதவியை பெற்றாார் என்பது உண்மை. அவர் ராஜ துரோகி. பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., உருவாகும். அவரது வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். நாங்கள் ஆட்சி அமைக்கும் போது அவர் எங்கிருப்பார் என தெரியாது என்றார்.