160 குவாரிகளில் கனிமவளம் சுரண்டல்; 'ட்ரோன்' ஆய்வில் கண்டுபிடிப்பு
160 குவாரிகளில் கனிமவளம் சுரண்டல்; 'ட்ரோன்' ஆய்வில் கண்டுபிடிப்பு
160 குவாரிகளில் கனிமவளம் சுரண்டல்; 'ட்ரோன்' ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை:தமிழகத்தில், 160 குவாரிகளில், அரசு அனுமதித்த அளவை விட, அதிக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டது, 'ட்ரோன்' ஆய்வு வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு வகையான கனிம வளங்கள் உள்ளன. குவாரிகள் அமைத்து, கனிமங்களை வெட்டி எடுத்து, வணிக ரீதியாக விற்பனை செய்ய, பல்வேறு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. இதை முறைப்படுத்த, 1983ல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஏற்படுத்தப்பட்டது.
பெருங்கனிமங்கள், சிறு கனிமங்கள் என பிரித்து, தனித்தனி சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதில் சிலிக்கா மணல், கிரானைட், கருங்கல், கிராபைட், சுண்ணாம்புக்கல் போன்றவை குவாரிகள் அமைத்து எடுக்கப்படுகின்றன. தனியார் நிலங்களில் குவாரிகள் இருந்தாலும், அதற்கு கனிம வளத்துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். வெட்டி எடுக்கப்படும் கனிமங்களின் அளவு அடிப்படையில், அரசுக்கு உரிமத் தொகையை செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும், அனுமதி வழங்கும் போது, எவ்வளவு கனிமங்கள் வெட்டி எடுக்க வேண்டும் என வரையறுக்கப்படுகிறது. அதன்படி மட்டுமே, குவாரி குத்தகைதாரர்கள் செயல்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில், அனுமதிக்கப்பட்டதை விட, அதிக அளவில் கனிமங்கள் எடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால், ஒரு குத்தகை காலம் முடிந்த நிலையில், அந்த பகுதியில் எந்த அளவுக்கு கனிமங்கள் எடுக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் விதிமீறல்கள் தெரிய வந்தால், குத்தகை எடுத்திருந்தவருக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கான ஆய்வு பணிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, டி.ஜி.பி.எஸ்., எனப்படும் புவியிட தகவல் அமைப்பு மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி குவாரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் குவாரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன்படி, 23 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, 113 சுரங்கங்கள், 1,756 குவாரிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன.கடந்த 2024 - 25 நிதி ஆண்டில், 13 நிறுவனங்களை பயன்படுத்தி, குத்தகை முடிந்த, 203 குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 160 குவாரிகளில் அனுமதிக்கு மாறாக, அதிக அளவு கனிமங்கள் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதலாக எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவுகள், மதிப்பீடு முடிந்த நிலையில், 55 குவாரி குத்தகைதாரர்களுக்கு, 68 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிய குத்தகைதாரர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நவீன தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக கனிம வள கொள்ளையில் துல்லியமான மதிப்பீடு மேற்கொள்ள முடிகிறது. இதனால், அரசுக்கு ஏற்படும் இழப்புகள் தடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.