தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் உண்டா: பொறுமை கடலினும் பெரிது என்கிறார் பிரேமலதா
தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் உண்டா: பொறுமை கடலினும் பெரிது என்கிறார் பிரேமலதா
தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் உண்டா: பொறுமை கடலினும் பெரிது என்கிறார் பிரேமலதா
ADDED : மே 27, 2025 05:05 PM

சேலம்; அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு ராஜ்ய சபா சீட் உண்டா என்ற கேள்விக்கு, பொறுமை கடலினும் பெரிது என்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
தமிழகத்தில் 6 ராஜ்ய சபா சீட்களுக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தங்கள் கூட்டணியில் யாருக்கெல்லாம் ராஜ்ய சபா சீட் தருவது என்று தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் ஆலோசனையை தொடங்கி உள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு எம்.பி., சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது ராஜ்ய சபா சீட் குறித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பிரேமலதா கூறி இருந்தார். யார் வேட்பாளர் என்பது கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அப்படி ஒப்பந்தத்தில் கூறவில்லை என்று இ.பி.எஸ்., அறிவித்து விட, அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே முரண்பாடு எழுந்தது. தற்போது ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு குறித்து பிரேமலதா பதிலளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நிருபர்கள் ராஜ்ய சபா சீட் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், தற்போது தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்திருந்து பாருங்கள், பொறுமை கடலினும் பெரிது என்றார்.