திமுக அரசின் இரட்டை வேடம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக அரசின் இரட்டை வேடம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக அரசின் இரட்டை வேடம்: இபிஎஸ் குற்றச்சாட்டு
ADDED : அக் 06, 2025 06:45 PM

சென்னை: '' தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் திமுக- அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சி, மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
மாறாக, கரூர் சம்பவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறுவதற்கு முன்பே, சில மணி நேரங்களிலேயே, போலீஸ் ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது. ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?
இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்தபோதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் தோல்வி அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


