'தி.மு.க., தனித்து நின்றால் 8 சதவீத ஓட்டு கூட வாங்காது': சீமான்
'தி.மு.க., தனித்து நின்றால் 8 சதவீத ஓட்டு கூட வாங்காது': சீமான்
'தி.மு.க., தனித்து நின்றால் 8 சதவீத ஓட்டு கூட வாங்காது': சீமான்
ADDED : செப் 19, 2025 01:19 AM

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சினிமாவில் உயர்ந்த நடிகராக இருக்கிறார்; அவருக்கென சந்தை மதிப்பு இருக்கிறது. அதை ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால், 'மக்களுக்காக என் உச்சத்தை, என் வருவாயை விட்டு விட்டு வந்தேன்' என, அடிக்கடி அவர் கூறுவதை கேட்டால், யார், அவரை சினிமாவை விட்டு வரச் சொன்னது என்ற கேள்வி தான் எழுகிறது.
நாட்டுக்காக தன் 600 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்த ஜம்புலிங்க முதலியார்; சுதந்திரத்துக்காக தன் சொத்துக்களை விற்று செலவழித்து, செக்கிழுத்து உயிரிழந்த வ.உ.சி.,; சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி கொடுத்ததோடு, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்த முத்துராமலிங்க தேவர் போன்றோர் இப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தனரா?
அப்படியென்றால், அவர்கள் செய்த தியாகத்தை விட, சினிமாவை விட்டு விட்டு வந்த நடிகர் விஜயின் செயல் பெரிதா? என்ன சொல்ல வருகிறார் விஜய்? யாரை ஏமாற்ற இந்தப் பேச்செல்லாம்?
மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டால், பெருமை பேசக்கூடாது. அப்படி சொன்னால், அது தலைவனுக்கு அழகல்ல. அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்றேன். வரும்போது ஈ.வெ.ராமராமி, எம்.ஜி.ஆர்., அண்ணாதுரையை துாக்கிக்கொண்டு வருவார் என நினைக்கவில்லை.
தி.மு.க.,வை உருவாக்கியவர் அண்ணாதுரை. அ.தி.மு.க.,வை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., இந்த இரு திராவிட கட்சிகளையும் எதிர்த்து, நாங்கள் சண்டை போடுகிறோம். அந்த இருவரையும் துாக்கிக் கொண்டு வந்தால், விஜயையும் எதிர்க்கத்தானே வேண்டும்.
தி.மு.க.,வை எதிர்த்து விட்டு, அண்ணாதுரையை விஜய் கும்பிடுகிறார் என்றால், அது என்ன கோட்பாடு. குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார் விஜய்.
விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க., கைக்கூலி என்கின்றனர். தி.மு.க.,வை எதிர்த்து பேசினால், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., கைக்கூலி என்கின்றனர்.
அண்ணாதுரை இறந்தபின், நெடுஞ்செழியனிடம் தி.மு.க., போகாததால், நாடு நாசமாகி விட்டது. தி.மு.க., தனித்து நின்று, ௮ சதவீத ஓட்டு வங்கியை பெறட்டும். நான் அரசியல் பேசுவதை விட்டு விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.