மணல் முறைகேடு வழக்கு ஈ.டி.,யின் மனு தள்ளுபடி
மணல் முறைகேடு வழக்கு ஈ.டி.,யின் மனு தள்ளுபடி
மணல் முறைகேடு வழக்கு ஈ.டி.,யின் மனு தள்ளுபடி
ADDED : செப் 24, 2025 12:12 AM
தமிழகத்தில், மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், அங்கீகரிக்கப்பட்ட அளவை தாண்டி குவாரிகளில் இருந்து மணலை அள்ளி விற்பனை செய்து, அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் எழுந்த புகாரின்படி, பல்வேறு மணல் குவாரி அதிபர்களின் வீடுகளில், 2023ல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி சொத்துகளை முடக்கினர்.
இது தொடர்பாக, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலுார், வேலுார் கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதித்தது.
இதற்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என, உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.
இதற்கிடையே, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மணல் குவாரி அதிபர்கள் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது சட்ட விரோதம் என, மணல் குவாரி அதிபர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரித்த உயர் நீதி மன்றம், மணல் குவாரிகள் அமலாக்கத் துறை விசாரணை வரம்புக்குள் வராது எனக்கூறி, மணல் குவாரி அதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, சொத்துகள் முடக்கத்தையும் நீக்கியது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதற்கான முகாந்திரம் இந்த வழக்கில் கிடையாது. எனவே அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மற்றும் இடையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -