Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை

கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை

கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை

கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை

ADDED : அக் 07, 2025 09:40 PM


Google News
Latest Tamil News
சென்னை:'' திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனை சுமார் 60 ஆண்டுகளாக, ஆதீனம் சார்பாக, பொதுமக்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கி வந்துள்ளது. பின்னர், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நகராட்சி இலவச மகப்பேறு மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.

மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, கடந்த சுமார் ஏழு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த மருத்துவமனையில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய குப்பை நுண்ணுயிர் கிடங்கை, நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாகக் காணப்படுகிறது.

தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்குக் கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு, தருமபுரம் ஆதீனம் மற்றும் தமிழக பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் மருத்துவமனை கட்டிடத்தை இடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தருமபுரம் ஆதீனம், இதனைக் கண்டித்து, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். பொதுமக்கள் நலனுக்காக, தருமபுரம் ஆதீனம் தொடங்கிய இலவச மருத்துவமனையைக் கைப்பற்றி, அரசின் கையாலாகாத்தனத்தால் இன்று அதன் நோக்கத்தையே சிதைத்து, குப்பைமேடாக ஆக்கி வைத்திருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி.

முதல்வர் ஸ்டாலினுக்குக் குப்பைமேடு அமைக்க வேண்டுமென்றால், உங்கள் கட்சிக்காரர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு, அதில் அமைத்துக் கொள்ள வேண்டும். தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனைக் கட்டிடத்தை இடித்துவிட்டு, அதில் குப்பைமேடு அமைக்க முடிவெடுத்திருப்பது, உங்கள் அரசின் வழிப்பறி.

திமுக அரசு, கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மயிலாடுதுறை இலவச மருத்துவமனை அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை, உடனடியாக தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us