சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை!
சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை!
சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை!
UPDATED : ஜன 28, 2024 09:07 AM
ADDED : ஜன 27, 2024 11:43 PM

திருப்பூர்;சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, பெரும் செலவில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றினாலும், அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என, சாய ஆலைகள் கவலை தெரிவித்துள்ளன.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில், சாய தொழில்நுட்பம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. வர்த்தகர்கள் எதிர்பார்க்கும் வண்ணத்தில், உயர்தரத்துடன் சாயமிட்டு கொடுப்பதன் மூலமாகத்தான், நேர்த்தியான ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருப்பூர் சாய ஆலைகளில் மட்டும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அமலில் உள்ளது. சாய ஆலைகள் இணைந்து, 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கி வருகின்றன.
பொது சுத்திகரிப்பு நிலையம், மின்சாரத்தை நம்பியே இயங்குகிறது. ஒவ்வொரு பொது சுத்தி கரிப்பு நிலையத்தின் இயக்க செலவில், 40 சதவீதம் வரை மின் செலவு ஏற்படுகிறது. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உருவாக்கி, தொழிலை பாதுகாக்க வேண்டும் என, சாய ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒத்துழைப்பு இல்லை
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில், பனியன் தொழில் நடக்க வேண்டும் என்பதற்காக, 'ஜீரோ டிஸ்சார்ஜ்'தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை, மறுசுழற்சி முறையில் பயன்படுத்துகின்றனர்.
அதிகப்படியான செலவில், இத்தகைய தொழில் நுட்பத்தை செயல்படுத்தினாலும், அதற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது, ஒவ்வொரு சாய ஆலைகளின் கவலை.
தற்போது, உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த கட்டணம் மட்டுமே கிடைக்கிறது. தொழிலாளர்களுக்கும், அதிக சம்பளம் வழங்கி தங்க வைக்க வேண்டியுள்ளது. வங்கிகள் தரப்பிலும் சரியான ஒத்துழைப்பு இல்லை என்று வருத்தம் அடைந்துள்ளனர்.
மறுசுழற்சி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கூடுதல் சலுகை வழங்க வேண்டும். அவ்வகையில், திருப்பூர் சாய ஆலைகளுக்கு உரிய சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், ஏற்றுமதியாளர்களை மட்டும் அழைத்து கருத்து கேட்கின்றனர். முக்கிய 'ஜாப் ஒர்க்' நடத்தி வரும் மற்ற துறையினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அரசு சலுகைகளும், ஏற்றுமதியாளருக்கு மட்டுமே கிடைக்கிறது.
'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு எவ்வித சலுகையும் கிடைப்பதில்லை. ஆடை வடிவமைப்பில் பங்கெடுக்கும் அனைத்து ஜாப் ஒர்க்' பிரிவுகளுக்கும் அரசு சலுகை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்து கேட்கணும்!
இது குறித்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னை பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், அனைத்து பாதிப்புகளையும், உண்மையை நிலையை எடுத்துரைத்துள்ளது. மத்திய, மாநில அரசு உதவியால் தான், தொழில் உயிருடன் இருக்கிறது.
இல்லாதபட்சத்தில், திருப்பூரில் சாயத்தொழில் காணாமல் போயிருக்கும். 'முதலீடு அதிகம்; வர்த்தக பரிவர்த்தனை மிக குறைவு' என்ற நிலையில், 'ஜாப்ஒர்க்' நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசு திட்டங்களில் பயன்பெற, நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். அனைத்து தரப்பினரிடமும், கருத்துக்கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழிலுக்கு உறுதுணை செய்யுங்கள்!
மத்திய அரசுடன் நேரடி தொடர்பில் உள்ள, 'பியோ' தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், சாய ஆலை தொழிலுக்கு உறுதுணை செய்ய வேண்டும். சாய ஆலைகள் சந்திக்கும் பிரச்னைகளை, அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, தகுந்த உதவியை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.