'சுகுணா புட்ஸ்' நிறுவனத்தில் மூன்றாவது நாளாக சோதனை தீவன வினியோக பாதிப்பால் விவசாயிகள் போராட்டம்
'சுகுணா புட்ஸ்' நிறுவனத்தில் மூன்றாவது நாளாக சோதனை தீவன வினியோக பாதிப்பால் விவசாயிகள் போராட்டம்
'சுகுணா புட்ஸ்' நிறுவனத்தில் மூன்றாவது நாளாக சோதனை தீவன வினியோக பாதிப்பால் விவசாயிகள் போராட்டம்
UPDATED : செப் 26, 2025 01:33 AM
ADDED : செப் 26, 2025 01:32 AM

உடுமலை:உடுமலையிலுள்ள, 'சுகுணா புட்ஸ்' நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை மூன்றாவது நாளாக நீடித்த நிலையில், தீவனம் இல்லாமல் கறிக்கோழிகள் இறந்து வருவதாக கூறி கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![]() |
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கறிக்கோழி வளர்ப்பு, விற்பனை, கறிக்கோழி இறைச்சி ஏற்றுமதி, தீவன உற்பத்தி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளது.
ஆய்வு கடந்த, 23ம் தேதி, காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, உடுமலை நேரு வீதியிலுள்ள நிறுவன அலுவலகம், கணபதிபாளையம், வரதராஜபுரத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலைகள், கோவை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்ட நிலையில், மூன்றாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை நீடித்தது.
பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், கணபதிபாளையத்தில் டிரங்க் பெட்டிகளில் வைத்திருந்த பல ஆண்டுக்கு முந்தைய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
சுகுணா நிறுவன ஊழியர்களையும் வெளியில் அனுப்பாமல், மூன்று நாட்களாக சோதனை நடந்து வருகிறது.
சுகுணா நிறுவன கோழித்தீவன உற்பத்தி ஆலைகளிலிருந்து, கறிக்கோழி பண்ணைகளுக்கு தீவனம் வினியோகம் வழங்கப்படுகிறது.
வருமான வரித்துறை சோதனை காரணமாக, தீவன உற்பத்தி ஆலைகளில், உற்பத்தி மற்றும் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.
அனுமதி தீவனம் இல்லாமல் கறிக்கோழிகள் இறந்து வருவதாகவும், உடனடியாக தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, கணபதிபாளையத்திலுள்ள தீவன உற்பத்தி ஆலை முன், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணி முதல், இரண்டு மணி நேரம் போராட்டம் நடந்த நிலையில், தீவன வினியோக வாகனம் வெளியே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.