தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பால் மூடி மறைத்த போலீஸ்
தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பால் மூடி மறைத்த போலீஸ்
தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பால் மூடி மறைத்த போலீஸ்
ADDED : மே 18, 2025 04:38 AM

தஞ்சாவூர்: திருவிடைமருதுார் அருகே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு வெளியான நாளில், இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டதால், அரசுக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் தகவலை மூடி மறைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த, 34 வயது பெண், கும்பகோணத்தில் உள்ள சிமென்ட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், குடவாசலை சேர்ந்த சண்முகபிரபு, 29, கும்பகோணம், பேட்டையை சேர்ந்தபாஸ்கர், 40, பாபநாசத்தை சேர்ந்தபிரகதீஸ்வரன், 40, ஆகிய மூவரும் வேலை பார்த்து வந்தனர்.
மே 12ம் தேதி, பணி முடிந்து வீட்டுக்கு சென்ற அப்பெண்ணை, பின்தொடர்ந்த மூவரும், அவரது வாயை பொத்தி, உமாமகேஸ்வரபுரம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சேதமடைந்த கட்டட பகுதிக்கு துாக்கிச் சென்றனர். அங்கு காத்திருந்த சீனிவாசநல்லுாரைச் சேர்ந்த சரவணன், 48, இருந்துள்ளார்.
நான்கு பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, வெளியில் கூறக்கூடாது என, மிரட்டியுள்ளனர். இது குறித்து, அப்பெண் தன் சகோதரர்களிடம் கூறி அழுதுள்ளார்.
மே, 13ம் தேதி அப்பெண், ஆடுதுறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட, சண்முகபிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன், சரவணன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அன்றைய தினம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி, அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த கூட்டு பலாத்காரம் நிகழ்வையும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட தகவலையும் வெளி வராமல், போலீசார் மூடி மறைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரிடமும், 'இது குறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது' என, போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால் தாமதமாக இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.