துாத்துக்குடி மின் நிலையம் மறுசீரமைப்பு ரூ.200 கோடி செலவிட அரசு அனுமதி
துாத்துக்குடி மின் நிலையம் மறுசீரமைப்பு ரூ.200 கோடி செலவிட அரசு அனுமதி
துாத்துக்குடி மின் நிலையம் மறுசீரமைப்பு ரூ.200 கோடி செலவிட அரசு அனுமதி

சென்னை: துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தீ விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்த முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகளை முழுமையாக மறுசீரமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது; இதற்கு, 200 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில், வ.உ.சி., துறைமுகம் அருகில் மின் வாரியத்திற்கு சொந்தமான துாத்துக்குடி அனல்மின் நிலையம் உள்ளது. அங்கு, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.

மார்ச் 15ம் தேதி இரவு 11:00 மணியளவில், முதலாவது அலகின், 'பாய்லர்' குளிர்விக்கும் குளிர்சாதன பகுதி செல்லும் கேபிள் ஒயரில் தீ விபத்து ஏற்பட்டது.
சில நிமிடங்களில் தீ வேகமாக பரவியதில், முதலாவது, இரண்டாவது அலகுகளில் மின் உற்பத்தி செய்யும் பகுதி, கட்டுப்பாட்டு அறை, சாதனங்கள் என, அனைத்தும் முழுதுமாக எரிந்து நாசமாகின.
முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏப்., 4ல் மூன்றாவது அலகில் மின் உற்பத்தி துவங்கியது. முதலாவது, இரண்டாவது அலகுகளில் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், சேத விபரத்தை உயரதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில், இரண்டு அலகுகளிலும் கட்டுபாட்டு அறை, 'சுவிட்ச் கியர்' உட்பட அனைத்து அமைப்புகளும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. செலவு, 210 கோடி ரூபாய். இதற்கு தமிழக அரசிடம், மின் வாரியம் அனுமதி கேட்டது.
தற்போது, அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இரு அலகுகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை, மின் வாரியம் துவக்கியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆயுட்காலமான, 25 ஆண்டுகளை தாண்டியும் துாத்துக்குடி மின் நிலையம் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் செலவு ஏற்பட்டாலும், துாத்துக்குடி மின் நிலையத்தின் இரு அலகுகளும் முழுதுமாக மறுசீரமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.