Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஹேமமாலினி தலைமையிலான குழு கரூரில் நேரடி விசாரணை

ஹேமமாலினி தலைமையிலான குழு கரூரில் நேரடி விசாரணை

ஹேமமாலினி தலைமையிலான குழு கரூரில் நேரடி விசாரணை

ஹேமமாலினி தலைமையிலான குழு கரூரில் நேரடி விசாரணை

UPDATED : செப் 30, 2025 01:26 PMADDED : செப் 30, 2025 11:10 AM


Google News
Latest Tamil News
கோவை: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் பாஜ எம்பி ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் நேரடி விசாரணை நடத்தினர். அவர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்.

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பலியானது குறித்து உண்மை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் குழுவை பாஜ அமைத்தது. இந்த குழுவினர் ஏற்கனவே அறிவித்தபடி கரூரில் தமது ஆய்வை தொடங்கினர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மக்களை சந்தித்து பேசினர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஹேமமாலினி நிருபர்களிடம் கூறியதாவது;

கரூர் செல்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க உள்ளோம்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை சந்திக்க இருக்கிறோம். அதன் பின்னரே என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்கு தெரிய வரும். அதுதொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்போம் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், ஏற்கனவே கரூர் வந்து பார்வையிட்டுச் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏதேனும் சந்தித்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பேசிய பாஜ எம்பி அனுராக் தாகூர், நாங்கள் நிதியமைச்சரை சந்திக்கவில்லை.

இது 8 பேர் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் குழு. நாங்கள் இங்குள்ள உள்ளூர் மக்களை (கரூர்) சந்திக்க இருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம்.

என்ன நடந்தது, எங்கே தப்பு நடந்தது என்று அறிய விரும்புகிறோம். ஒரு முக்கியமான விஷயத்துக்காக இங்கு வந்திருக்கிறோம்.

பின்னர், மாவட்ட நிர்வாகத்தினர், அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திப்போம். அன்றைய நாளில்( செப். 27) என்னதான் நிகழ்ந்தது என்று கேட்டு, அதுதொடர்பான அறிக்கையை எங்கள் கட்சி தேசிய தலைவரிடம் அளிப்போம் என்று கூறினார்.

தொடர்ந்து பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

விபத்து நிகழ்ந்த இடத்தை பார்க்க உள்ளனர். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பார்கள், பின்னர், உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் செல்ல இருக்கின்றனர் என்றார்.

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்த வேலுச்சாமி புரத்தில் பாஜ எம்பி ஹேமமாலினி தலைமையிலான குழுவினர் நேரடி விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மக்களை சந்தித்து பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us