காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவருக்கு வழிகாட்டிய ஐகோர்ட்
காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவருக்கு வழிகாட்டிய ஐகோர்ட்
காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவருக்கு வழிகாட்டிய ஐகோர்ட்
ADDED : மார் 17, 2025 01:03 AM

சென்னை: 'வாரிசு சான்றிதழுக்கு ஒருவர் காலம் கடந்து விண்ணப்பிக்கும் போது, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என ஐந்து பேர், ஆதரவாக பிரமாண மனுக்கள் தாக்கல் செய்தால், அதன் அடிப்படையில் வாரிசு சான்றிதழ் வழங்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அரசு என்பவர் தாக்கல் செய்த மனு:
என் தந்தை சி.பி.சுப்பிரமணிக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில், திருவல்லிக்கேணி கஜபதி தோட்டத்தில் நிலம் வழங்கப்பட்டது. என் தந்தை, 1998ல் இறந்து விட்டார். என் தாயும், இரு அண்ணன்களும் இறந்து விட்டனர்.
தற்போது, நானும், என் சகோதரிகளான சாந்தகுமாரி, மேனகா மட்டுமே உள்ளோம். எங்கள் தந்தை இறந்தவுடன், நாங்கள் வாரிசு சான்றிதழ் பெறவில்லை.
தற்போது, குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய நிலத்துக்கு, அரசு பட்டா வழங்கி வருகிறது. எங்களிடம் வாரிசு சான்றிதழ் இல்லாததால், பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
வாரிசு சான்றிதழ் கோரி, மயிலாப்பூர் தாசில்தாரிடம், 2022 மார்ச், 30ல் மனு அளித்தேன். அந்த மனுவை நிராகரித்து, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். எனவே, எங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க, தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஐ.கெல்வின் ஜோன்ஸ் வாதாடியதாவது:
பொதுவாக யாராவது ஒருவர் இறந்து விட்டால், அவரது வாரிசுகள், ஓராண்டுக்குள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி வாரிசு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டு தாண்டிவிட்டால், தாசில்தாரிடம் விண்ணப்பித்து பெறலாம்.
ஆனால், ஏழு ஆண்டுகள் தாண்டி விட்டால், சட்ட ரீதியாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தான் வாரிசு சான்றிதழ் பெற முடியும் என்ற நிலை உள்ளது. மனுதாரரை போல சட்ட விழிப்புணர்வு இல்லாத பலர், வாரிசு சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஒருவரது இறப்பு சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டால், அவரது வாரிசுகள் யார் என்பதை, அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வாரிசு சான்றிதழ் பெறாதவர்கள், காலம் தாண்டி விண்ணப்பிக்கும் போது, ஒருவேளை அவர்களிடம் போதிய ஆதாரம் இல்லை என்றால், தங்களின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என, ஐந்து நபர்களிடமிருந்து, 'இவர்கள் தான் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்கள்' என, தனித்தனியாக பிரமாண பத்திரம் பெற்று, தாக்கல் செய்ய அதிகாரிகள் உத்தரவிடலாம்.
இதற்கு போட்டியாகவோ அல்லது ஆட்சேபம் தெரிவித்தோ, யாரும் எதிர் மனுக்களை தாக்கல் செய்யாவிட்டால், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கலாம்.
எனவே மனுதாரர் தன் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என, ஐந்து பேரின் பிரமாண பத்திரங்களுடன், வரும், 28-ம் தேதி தாசில்தார் முன் ஆஜராக வேண்டும். அதன் அடிப்படையில், அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, மனுதாரருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.