Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 10, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
சென்னை: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டரை, 'சஸ்பெண்ட்' செய்ய, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சக்தி, 38; டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 42, கடந்த 2023 செப்., 8ல், சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார்.

தன் உறவினருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதோடு, 3.5 லட்சம் ரூபாய் கொடுத்து, கார் வாங்கி வாடகைக்கு விட்டு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை தருவதாக கூறி, சக்தி, அவரது தந்தை குணசேகரன் ஆகியோர் ஏமாற்றியதாக, புகாரில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சக்தி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, கடந்த ஆண்டு மார்ச் 1ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து, கடந்த 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகனுக்கு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நாளுக்கு முன்தினம், நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவசர அவசரமாக மின்னணு முறையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை பார்க்கும்போது, வழக்கில் முழுமையாக விசாரணை நடந்ததா என்று சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி ஏன் செயல்படவில்லை என்பதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, உரிய கால அவகாசம் கோரியும் மனு தாக்கல் செய்யவில்லை. விசாரணை அதிகாரியின் இந்த செயல் அலட்சிய போக்கானது.

இந்த வழக்கு மட்டுமல்ல; பெரும்பாலான வழக்குகளில், போலீசார் உரிய நேரத்தில் விசாரணை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில்லை. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, எந்த கால அவகாசமும் நிர்ணயம் செய்யப்படாததால், அதை சாதகமாக எடுத்துக் கொள்கின்றனர்.

பெரும்பாலான வழக்குகளில், உள்ளே, வெளியில் இருந்து வரும் அறிவுறுத்தல்களின்படி தேர்வு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கின்றனர். எனவே, ஏழை மக்கள் விரைவான தீர்வு பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இதுவே, தமிழகத்தின் தற்போதைய நிலைமை. எனவே, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் மீது, டி.ஜி.பி., துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை உடனடியாக, கள்ளக்குறிச்சி எஸ்.பி., சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை, டி.ஜி.பி., மற்றும் மாவட்ட எஸ்.பி., ஜூலை 7க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us