Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஹவுசிங் யூனிட் கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களால் பிரச்னை!

ஹவுசிங் யூனிட் கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களால் பிரச்னை!

ஹவுசிங் யூனிட் கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களால் பிரச்னை!

ஹவுசிங் யூனிட் கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களால் பிரச்னை!

ADDED : பிப் 29, 2024 08:46 PM


Google News
வீட்டு வசதி வாரியத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியால், ஓராண்டாகியும் எந்த தீர்வும் ஏற்படாததால், தமிழகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளிலும், நாற்பதாண்டுகளுக்கு முன்பிருந்தே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டன. அவற்றில் சில இடங்களில் மட்டுமே, வீட்டு வசதி வாரியத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், நிலமெடுப்புக்கான அறிவிக்கை தரப்பட்டு, பல ஆண்டுகளாகியும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

விற்பனை நடக்கிறது


அதனால், அந்த நிலங்கள் பிற நபர்களுக்கு விற்கப்பட்டு, மனையிடங்களாக மாற்றப்பட்டு, லட்சக்கணக்கான வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இன்னும் சில பகுதிகள் மட்டுமே, விவசாய நிலங்களாகவும், காலி நிலங்களாகவும் உள்ளன.

பத்திரப்பதிவு, கணினிமயமான பின்பு, இந்த நிலங்களை பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; வருவாய்த்துறை ஆவணங்களிலும், 'கையகப்படுத்தப்பட்ட நிலம்' என்ற வகைப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, வீட்டு வசதி வாரியத்திடம் தடையின்மைச் சான்று பெற்று, இந்த இடங்களை விற்பது வழக்கமாகவுள்ளது.

பல லட்சம் லஞ்சம்


இந்த சான்று பெறுவதற்கு, நிலத்தின் மதிப்பு மற்றும் பரப்பளவின் அடிப்படையில், லட்சங்களில் லஞ்சம் வாங்கப்படுகிறது. இதில் ஏராளமான விவசாய நிலங்களும் இருப்பதால், பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுகுறித்த புகார்கள் அதிகமாகக் குவிந்து வருவதால், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விதமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களைக் கொண்ட சிறப்புக் கமிட்டி அமைத்து, ஆய்வு செய்து தீர்வு காணப்படுமென்று, கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ஓராண்டாகியும் இந்த கமிட்டி எதுவும் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கவில்லை; தீர்வும் ஏற்படவில்லை.

இந்த பிரச்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது கோவை மாவட்டம் தான். தொழில் வளம் மிக்க இந்த மாவட்டத்தில், நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகமாக இருப்பதால், கோவையிலுள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற, பெரும் தொகை லஞ்சமாக கைமாறி வருகிறது.

இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டால், விவசாயிகளுடன் பல ஆயிரம் பொது மக்களும் நிம்மதியடைவர்!

புகார்களை அடுக்கிய விவசாயிகள்


கோவையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில், நேற்று முன் தினம் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், வீட்டு வசதிவாரிய நிலம் தொடர்பான பிரச்னை குறித்து ஏராளமான விவசாயிகள், புகார்களை அடுக்கினர்.கடந்த 1980ல் நோட்டீஸ் கொடுத்து, 2007ல் பட்டா மாறுதல் செய்த நிலத்தையும் கையகப்படுத்தாததை சுட்டிக்காட்டிய விவசாயிகள், அதில் விவசாயம் நடந்து வருவதாக தகவல் தெரிவித்தனர்.
இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு டி.ஆர்.ஓ., ஷர்மிளா பதிலளிக்கையில், ''கோவையில் தான் 436 ஏக்கர் அளவு நிலத்துக்கு இந்த பிரச்னை உள்ளது. இதற்காக அரசு அமைத்த கமிட்டி, விரைவில் ஆய்வு செய்து, பகுதிவாரியாக மக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும்; அதனால் விரைவில் இதற்குத் தீர்வு கிடைக்கும்,'' என்று தெரிவித்தார்.



-நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us