Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மதுபாட்டில் வாங்கினால் இனி 'எம்.ஆர்.பி., ரேட்' மட்டுமே: வசூல் 'டிஜிட்டல்' முறை மாற்றத்தால் ஊழியர்கள் அடாவடிக்கு 'செக்'

மதுபாட்டில் வாங்கினால் இனி 'எம்.ஆர்.பி., ரேட்' மட்டுமே: வசூல் 'டிஜிட்டல்' முறை மாற்றத்தால் ஊழியர்கள் அடாவடிக்கு 'செக்'

மதுபாட்டில் வாங்கினால் இனி 'எம்.ஆர்.பி., ரேட்' மட்டுமே: வசூல் 'டிஜிட்டல்' முறை மாற்றத்தால் ஊழியர்கள் அடாவடிக்கு 'செக்'

மதுபாட்டில் வாங்கினால் இனி 'எம்.ஆர்.பி., ரேட்' மட்டுமே: வசூல் 'டிஜிட்டல்' முறை மாற்றத்தால் ஊழியர்கள் அடாவடிக்கு 'செக்'

ADDED : அக் 12, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
சென்னை,: மதுக்கடைகளில் கூடுதலாக பணம் வசூலிப்பதை முற்றிலுமாக தடுக்க, 'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்தவும், மது பாட்டிலின் எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விலை என்னவோ, அதை மட்டும், 'ஸ்கேன்' செய்து செலுத்தவும், இந்த வாரத்திற்குள் புதிய வசதி அமலுக்கு வர உள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது.

ஊழியர்கள் ஒரு மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட, கூடுதலாக பணம் வசூலிப்பது, குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளை விற்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

இதைத்தடுக்க, மதுபான ஆலையில் மது பாட்டில் வாங்குவதில் இருந்து, வாடிக்கையாளர்களிடம் விற்பது வரை கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் மூன்று - நான்கு கையடக்க வடிவிலான, 'ஸ்கேனர், பிரின்டர்' கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

அந்த கருவியில் ஒவ்வொரு மது பாட்டிலில் உள்ள, கியு.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்து தான் விற்க வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு, ஏற்கனவே வங்கிகள் வழங்கிய கருவி பயன்படுத்தப்படுகிறது.

அந்த கருவியில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது, 10 ரூபாய், 20 ரூபாய் சேர்த்து, ஊழியர்கள் வசூல் செய்கின்றனர். பின், தினமும் விற்பனை விபரங்களை சரிபார்க்கும் போது, ரொக்க பணத்தில் இருந்து, டிஜிட்டல் முறையில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை எடுத்துக் கொள்கின்றனர்.

இனி, ரொக்கப்பணம் மற்றும் டிஜிட்டல் பணம் வசூலுக்கு, கணினிமய திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, 'ஸ்கேனர்' கருவி மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.

இது, சோதனை ரீதியாக, நாமக்கல், மதுரை தெற்கில் சில தினங்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், இந்த வாரத்தில் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட உள்ளது.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்கேனர் கருவியில், மது பாட்டிலை ஸ்கேன் செய்ததும், அதில் ரொக்கப் பணமா, டிஜிட்டல் பரிவர்த்தனையா என, கேட்கும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்றால், மது பாட்டிலின் விலை என்னவோ, அது தான் கியூ.ஆர்., குறியீட்டில் தெரியும். அதை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தலாம். இதனால், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, ஒரு ரூபாய் கூட கூடுதலாக தர வேண்டியதில்லை.

ரொக்கப்பணம், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பணத்தை வாங்க மறுக்கக் கூடாது. எனவே, ஒவ்வொரு கடையிலும் தினமும் வசூலாகும் மொத்த தொகையில், 50 சதவீதம் டிஜிட்டல் பணம் இருக்க வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டு உள் ளது.

மதுக்கடைகளில் என்னென்ன மது வகைகள் விற்கப்படுகின்றன என்ற விபரத்தை, கணினிமயத்தால் அறிய முடிகிறது.

அதற்கு ஏற்ப, மது வகைகள் கடைகளுக்கு அனுப்பப்படுவதால், எந்த மது பாட்டிலுக்கும் முன்னுரிமை அளிக்க முடியாது; அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மது பாட்டில்களை விற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

'டாப்' 5 மாவட்டங்கள்

டாஸ்மாக் கடைகளில், 2023ல், ஒற்றை இலக்கமாக இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை, தற்போது, 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னை தெற்கு, 36 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. காஞ்சி வடக்கு, 34 சதவீதத்துடன் 2வது இடம்; சென்னை மத்தி, 32 சதவீதத்துடன் 3வது; திருவள்ளூர் கிழக்கு, 27 சதவீதத்துடன் 4வது; திருப்பூர், 27 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us