சட்ட விரோத பண பரிமாற்றம் மெட்ரோ ரயில் கண்காணிப்பாளர் தொழிலதிபர் வீடுகளில் சோதனை
சட்ட விரோத பண பரிமாற்றம் மெட்ரோ ரயில் கண்காணிப்பாளர் தொழிலதிபர் வீடுகளில் சோதனை
சட்ட விரோத பண பரிமாற்றம் மெட்ரோ ரயில் கண்காணிப்பாளர் தொழிலதிபர் வீடுகளில் சோதனை
ADDED : செப் 25, 2025 12:56 AM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் அதிபர் மற்றும் மெட்ரோ ரயில்வே அதிகாரி வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, நொளம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் தொழிலதிபர் வைத்தீஸ்வரன்; கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
வைத்தீஸ்வரனின் வங்கி கணக்கு வாயிலாக சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது பற்றி, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அவரின் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.
அதேபோல, சென்னை, முகப்பேர், ஜெ.ஜெ., நகர், கண்ணதாசன் தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார்.
இவர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீதும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சதீஷ்குமார் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபீர் அகமது. தோல் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்கு, இவரின் வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், சபீர் அகமது வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள், ஏழு மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர்.