ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி 'இரிடியம்' மோசடி: 30 பேர் கைது
ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி 'இரிடியம்' மோசடி: 30 பேர் கைது
ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி 'இரிடியம்' மோசடி: 30 பேர் கைது
ADDED : செப் 14, 2025 06:02 AM

சென்னை:ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்தி, அரிதான பொருளான, 'இரிடியம்' விற்பனை மோசடியில் ஈடுபட்ட, 30 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.
அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களை குறிவைத்து, இரிடியம் வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, மர்ம கும்பல் மோசடி செய்து வந்தது.
இதற்காக, ரிசர்வ் வங்கியின் பெயரில், போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாத அறக்கட்டளையை அந்த கும்பல் நடத்தி வந்தது.
இந்த மோசடிக்கு, வெளிநாடுகள் மற்றும் உள்ளூரில் இருந்து வரும் பண பரிவர்த்தனைகளை, அந்த அறக்கட்டளை பெயரில் நிர்வகித்ததும் தெரியவந்தது.
குறிப்பாக, இக்கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்போரின் வங்கி கணக்கில் சந்தேகத்திற்குரிய முறையில், பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று, ஏமாற்றி வந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அந்த கும்பல் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் சி.பி.சி.ஐ.டி., பிரிவில், முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட, 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் ஆறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் வகையில், 20 மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த சோதனையின்போது, தமிழகத்தில் 43 இடங்கள், வெளி மாநிலங்களில் நான்கு இடங்கள் என, 47 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 70க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், சென்னையை சேர்ந்த சுவாமிநாதன், காட்பாடியைச் சேர்ந்த ஜெயராஜ், திண்டுக்கல்லைச் சேர்ந்த டெய்சி ராணி உட்பட, 30 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.