ADDED : மார் 17, 2025 03:23 AM

'கோவில் வருமானத்திற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்' என்பதற்கு, தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கட்சி மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த, புறநகர் பகுதிகளில் உள்ள கிராம காங்கிரஸ் கமிட்டி மற்றும் வார்டு கமிட்டிகளை சீரமைக்க, சீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு எடுத்த நடவடிக்கை காரணமாக, இதுவரை 7,400 கமிட்டிகள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகளை, ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கோவில் வருமானத்தில், 18 சதவீதம், சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். பிரசாதம், தரிசன கட்டணம், தங்கும் விடுதி போன்றவற்றை, ஜி.எஸ்.டி., விதிப்பின் கீழ் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., மற்றும் அதற்கான அபராதம் என, ஒவ்வொரு கோவிலும், பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரை, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை கண்டிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.