இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?: இபிஎஸ் கேள்வி
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?: இபிஎஸ் கேள்வி
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?: இபிஎஸ் கேள்வி

சென்னை: தென்காசியில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், இது தமிழ்நாடா... இல்லை கொலைநாடா... எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது. இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?
இந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது. குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாக தமிழகத்தை மாற்றியது தான் இந்த 'ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை'.என விளம்பரப்படுத்த வேண்டியது தானே முதல்வரே?
ரோட்டிலும் கொலை,கோர்ட்டிலும் கொலை,பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள், போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள், இப்படி தமிழகத்தில் சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை, என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல். இப்படி சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு,தங்கள் அன்றாட வாழ்வில், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய முதல்வருக்கு கடும் கண்டனங்கள்.
தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.


