சிறுநீரக விற்பனை மோசடி வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் தகவல்
சிறுநீரக விற்பனை மோசடி வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் தகவல்
சிறுநீரக விற்பனை மோசடி வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : செப் 25, 2025 11:56 PM
மதுரை: சிறுநீரக விற்பனை முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பும், சி.பி.ஐ.,விசாரணை கோரி அங்கு மேல்முறையீடு செய்துள்ளதாக மனுதாரர் தரப்பிலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
பரமக்குடி சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு: நாமக்கல் மாவட்டத்தில் சில ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்தனர். அத்தொழிலாளர்களை சட்டவிரோதமாக சிறுநீரகம் (கிட்னி) தானம் செய்பவர்களாக பயன்படுத்தினர். இதற்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. இம்முறைகேட்டில் திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களிலுள்ள இரு தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டுள்ளன. பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையை மணச்சநல்லுார் தி.மு.க.,-எம்.எல்.ஏ.,கதிரவனின் குடும்பம் நிர்வகிக்கிறது. திருச்சி மருத்துவமனை ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவருடன் தொடர்புடையது. தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு, 'சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய திருச்சி, பெரம்பலுாரிலுள்ள இரு மருத்துவமனைகளுக்கு வழங்கிய உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன,' என அறிக்கை தாக்கல் செய்தது.
ஆக.,25 ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் மதுரை எஸ்.பி., அரவிந்த், நீலகிரி எஸ்.பி., நிஷா, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன், கோவை எஸ்.பி., கார்த்திகேயன் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படுகிறது. இக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் செந்தில்வேல்: சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் அக்.,23 க்கு ஒத்திவைத்தனர்.