Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வனத்துறையிடம் நிலம் பெறுவது கடினமாக உள்ளது அமைச்சர் துரைமுருகன் வேதனை

வனத்துறையிடம் நிலம் பெறுவது கடினமாக உள்ளது அமைச்சர் துரைமுருகன் வேதனை

வனத்துறையிடம் நிலம் பெறுவது கடினமாக உள்ளது அமைச்சர் துரைமுருகன் வேதனை

வனத்துறையிடம் நிலம் பெறுவது கடினமாக உள்ளது அமைச்சர் துரைமுருகன் வேதனை

ADDED : அக் 16, 2025 07:42 PM


Google News
சென்னை:''திருவண்ணாமலை மாவட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்துடன் புதிய ஏரிகளை இணைக்கும் திட்டம், வனப்பகுதி நிலம் கிடைத்தால் நிறைவேற்றப்படும்,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., - சரவணன்: கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்துடன், இறையூர் மற்றும் வடமாத்துார் ஏரிகளை இணைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: திருவண்ணாமலை மாவட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதால், புதிய ஏரிகளை இணைக்க இயலாது. அவ்வாறு இணைத்தால், குப்பநந்தம் நீர்த்தேக்க திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஆயக்கட்டுகளின் நீர் உரிமைகள் பாதிக்கப்படும்.

மேலும் இறையூர், வடமாத்துார் ஏரிகளை இணைக்க, இறையூர் வனப்பகுதியில் அதிக நீளம், ஆழம் உடைய கால்வாய் வெட்ட வேண்டி உள்ளது. இதற்கு, 10 ஏக்கர் வன நிலம் தேவைப்படும். எனவே, இத்திட்டம் சாத்தியமற்றது.

சரவணன்: இந்த ஏரிகளை இணைத்தால், எங்கள் பகுதியில் உள்ள, 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். வனப்பகுதியில் நிலம் பெற முயற்சி எடுக்கிறோம். இந்த திட்டத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: நிதி ஆதாரம் இருந்து, வனத்துறை நிலம் எடுக்க அனுமதி கிடைத்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், வனப்பகுதியில் ஒரு மண்வெட்டி நிலம் எடுக்க கூட, நம்மை அனுமதிக்க மாட்டார்கள். எனினும், நிலம் எடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.



சரவணன்: செண்பகத்தோப்பு அணையும், குப்பநத்தம் அணையும் சீரமைக்கப்பட்டுள்ளது. மிருகண்டா நதி அணை 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மதகுகள் பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. அதை சீரமைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: நான் கட்டிய அணை. தீபாவளி முடிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க., - ராஜன் செல்லப்பா: மதுரை மாவட்டம் விரகனுார் அணை சுற்றுலா பகுதியாக உள்ளது. அந்த அணை பராமரிக்கப்படாததால், ஆய்வு மாளிகை, சுற்றுலா தலம் பராமரிப்பின்றி உள்ளது. அவற்றை புனரமைக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: கோரிக்கையை எழுதி கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us