Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 29, 2025 05:14 PM


Google News
Latest Tamil News
சென்னை: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

திருபுவனம் போலீசார் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாகத் தாக்கியதாலேயே அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றிய ஆறு தனிப்படை போலீசாரை் சிவகங்கை மாவட்ட எஸ்.பி, சஸ்பெண்ட் செய்துள்ளார்.

போலீஸ் விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர் துடைப்பா?

திருட்டு புகாருக்காக அஜிதைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு போலீசார், அஜித் மரணத்திற்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?

திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டவிசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.

முதல்வர் ஸ்டாலின் போலீஸ் ஸ்டேசன் மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் போலீசார் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us