போலீசில் பணியாற்ற விருப்பம் இல்லை; மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி., ராஜினாமா!
போலீசில் பணியாற்ற விருப்பம் இல்லை; மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி., ராஜினாமா!
போலீசில் பணியாற்ற விருப்பம் இல்லை; மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி., ராஜினாமா!
ADDED : ஜூன் 16, 2025 07:33 AM

சென்னை: 'காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இல்லை' எனக்கூறி, போலீஸ் எஸ்.பி., அருண், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அருண். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, 2013ல் காவல்துறை டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் செயல்படும், சிறப்பு காவல் படை, 12வது பட்டாலியனின் கமாண்டன்ட்டாக பணிபுரிந்து வந்தார். அருண் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இல்லை என்றும் கூறி வந்துள்ளார்.
பல முறை தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக, சக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.அவர்கள் விடுமுறையில் சென்று வாருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ராஜினாமா செய்ய முடிவெடுத்த அருண், மூன்று மாதங்களுக்கு முன், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
அவர் மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்துள்ளார். அதை அருண் ஏற்காததால், அவரது ராஜினாமா கடிதத்தை, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். டி.ஜி.பி., அலுவலக உயர் அதிகாரிகள், ராஜினாமாவுக்கான காரணத்தை கேட்ட போது, காவல் துறையில் பணியாற்ற விருப்பம் இல்லை. மேலும் வெளிநாடு செல்ல உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, அவரது ராஜினாமா கடிதத்தை, அரசுக்கு டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் அனுப்பினர். அவரது ராஜினாமா கடிதத்தை, இரு தினங்களுக்கு முன் அரசு ஏற்றது.