மீண்டும் ஓசி சர்ச்சை; தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
மீண்டும் ஓசி சர்ச்சை; தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
மீண்டும் ஓசி சர்ச்சை; தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
ADDED : ஜூன் 11, 2025 05:46 PM

சென்னை: பொதுமக்களை ஓசி என்று கூறிய ஆண்டிப்பட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மகாராஜனுக்கு பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; பஸ்சில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த தி.மு.க., அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு தி.மு.க., சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று பெண்களை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க.,எம்.எல்.ஏ.,வின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.