குலசை தசராவில் ஆபாச நடனம் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு
குலசை தசராவில் ஆபாச நடனம் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு
குலசை தசராவில் ஆபாச நடனம் கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு
ADDED : செப் 25, 2025 12:29 AM
மதுரை:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா கலைவிழாவில் ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்த பாடல்களுக்கு தடை கோரிய வழக்கில், கண்காணிப்பு குழுவினர் 'வீடியோ' பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொது நல மனு:
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில், பக்தர்கள் குழுவாக ஆடிப்பாடி ஊர்தோறும் காணிக்கை வசூல் செய்வர். சில ஆண்டுகளாக, அதிக பணம் வசூல் செய்யும் நோக்கில் சினிமா, 'டிவி' நடிகைகளை கொண்டு சினிமா பாடல்கள், இரட்டை அர்த்த பாடல்களுக்கு நடனம் ஆட வைக்கின்றனர்.
ஆடல், பாடல் நிகழ்ச்சி அனுமதி தொடர்பான வழக்கில், 2023ல் உயர் நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், 2023 மற்றும் 2024 தசரா கலை விழாவில், நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை.
தற்போது தசரா விழா துவங்கியுள்ளது. அக்., 3ல் நிறைவடையும். தசரா கலை நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெற, நடனமாட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கலை நிகழ்ச்சியில் பங்கேற்போர் மது அருந்தக்கூடாது. கண்காணிப்பு குழுவை அரசு தரப்பில் அமைக்க வேண்டும்.
குலசேகரபட்டினம் தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், கோவில் செயல் அலுவலர் சார்பில் தலா ஒரு பிரதிநிதி, உள்ளூரை சேர்ந்த மூவர் என மொத்தம் ஆறு பேர் குழுவில் இடம் பெற வேண்டும்.
அவர்கள் கலை விழாவை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அக்., 9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர விட்டனர்.