Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களின் பட்டியல்: தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு

கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களின் பட்டியல்: தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு

கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களின் பட்டியல்: தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு

கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களின் பட்டியல்: தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு

UPDATED : அக் 03, 2025 07:34 AMADDED : அக் 03, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
மதுரை: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியிலுள்ள 540 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2019 அக்., 23 ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.

இதை நிறைவேற்றாததால் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட கமிஷனராக இருந்த மதுசூதனன்ரெட்டி, அறநிலையத்துறை கமிஷனராக இருந்த முரளிதரன், கரூர் கலெக்டர் தங்கவேல், கோயில் செயல் அலுவலர் சுகுணா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

2024 அக்., 30 ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: 2019 ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரவை நிறைவேற்ற துறை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை இந்நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். அதில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் செயல் அலுவலர், திருப்பத்துார் அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதை தடுத்துள்ளனர். இரு அதிகாரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பை கரூர் எஸ்.பி., வழங்க வேண்டும். கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள அரசு அலுவலர்கள் (பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்றவர்கள்), தொழிலதிபர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள், ஆக்கிரமித்துள்ள பரப்பளவு விபரங்களை அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

மீண்டும் விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: 2024 ல் பிறப்பித்த உத்தரவின்படி இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை அல்லது அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை அக்., 10 ல் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us